சீனாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

china_flag_001சீனாவின் நடவடிக்கைகளை ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் கண்காணித்து வருகின்றன என்று அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் எச்சரித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரீகன் தேசியப் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்ட்டர் பேசியதாவது:

அமெரிக்காவும், ரஷியாவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்திகளாக மட்டும் தற்போது திகழவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதன்மூலம், அப்பகுதியில் உள்ள நாடுகளும், மக்களும் எழுச்சியடையவும், வெற்றி பெறவும் முடிகிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வியப்பு தரும் விஷயங்கள் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில், ஜப்பான், தென்கொரியா, தைவான் நாடுகளும், தென்கிழக்கு ஆசியாவும் வளர்ச்சியடைந்தன. தற்போது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், நடுத்தரவாசிகள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது.

அதேசமயம், வளர்ந்து வரும் சக்தியான சீனா தனக்கென்று இலட்சியங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவும் தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது. இந்நிலையில், அமைதி, பாதுகாப்புக்கு சீனா தனது பங்களிப்பை எவ்வாறு அளிக்கும் என்று தெரியவில்லை. இதன்காரணமாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகள் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன என்றார் கார்ட்டர்.

ரஷியா குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “அந்நாட்டுடன் பனிப்போரில் ஈடுபடுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷியாவை அமெரிக்கா எதிரியாக கருதவில்லை. அதேசமயம், அமெரிக்கா தனது பாதுகாப்பு விவகாரத்தில் எந்தத் தவறையும் செய்யாது.

தனது நலன்களையும், கூட்டாளி நாடுகளின் நலன்களையும் காக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்கா மேற்கொள்ளும்’ என்றார்.

-http://www.dinamani.com