மியான்மர் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை, ஆனால்…: ஆங் சான் சூ கி

aung san suu kyiயங்கூன்: மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் என்.எல்.டி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிடாமல் சதி நடப்பதாக என்.எல்.டி. கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்து வந்த மியான்மரில் 25 ஆண்டுகள் கழித்து ஜனநாயக முறைப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே தான் போட்டி.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை மாலையே துவங்கிவிட்டது. 70 சதவீத இடங்களில் சூ கியின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடாமல் சதி நடப்பதாக சூ கியின் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இறுதி முடிவுகள் வெளியாக பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து சூ கி கூறுகையில், தேர்தல் நியாயமாக நடக்கவில்லை இருப்பினும் பெரும்பாலும் சுதந்திரமாக நடந்துள்ளது. காலம் மாறிவிட்டது, மக்கள் மாறிவிட்டனர். என்னை அதிபராக விடாவிட்டாலும் என் சகாவை அந்த பதவியில் அமரவைத்துவிட்டு முக்கிய முடிவுகளை நான் எடுப்பேன்.

நாட்டிற்கு ஏற்ற நல்ல அதிபரை தேர்வு செய்வேன். வெற்றி பெற்ற கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருந்து என்னை யாரும் தடுக்க முடியாது. என் அரசு முஸ்லீம்களை பாதுகாக்கும்.

மேலும் மக்களிடையே வெறுப்பை தூண்டிவிடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மியான்மர் மக்களில் பெரும்பாலானோர் அமைதியை விரும்புகிறார்கள். அவர்கள் வெறுப்பு மற்றும் பயத்தோடு வாழ விரும்பவில்லை என்றார்.

முன்னதாக 1990ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது தேர்தலில் சூ கியின் கட்சி வெற்றி பெற்றும் அதை ராணுவம் ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது சூ கி கட்சியின் வெற்றியை ராணுவம் ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

tamil.oneindia.com