தமிழர்களை ஏமாற்றி போர்ச் சூழலுக்குள் தள்ளிவிட்டார் மைத்திரி! சரவணபவன்

sara_001தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பதவியைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழர்களுக்கு  எந்தவொரு நன்மையையும் செய்யாமல், அரசியல் கைதிகளைக் கூட விடுதலை செய்யாமல் தமிழர்களை அவர் மீண்டும் போர்க் காலச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தெற்கில் சிங்கள மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டி நின்றபோது தமிழர்களும் சேர்ந்தே அதனைச் சாத்தியமாக்கினார்கள். அதன் மூலமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக
முடிந்தது.

ஆனால், ஜனாதிபதி இன்று அதனை மறந்துவிட்டார். தான் பெற்றக்கொண்ட பதவி மூலம் சிங்கள மக்களுக்கு நன்மைகளைச் செய்யும் அவர் தமிழ் மக்களைக் கவனிக்கத் தவறிவிட்டார். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை – அவர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கையை – காப்பாற்றத் தவறிவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக – பொதுத் தேர்தலின்போதும் கூட- தமிழர்களுடன் காணப்பட்ட எழுதப்படாத இணக்கப்பாடுகளில் அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று.
ஆனால் இன்று அதனை ஜனாதிபதியும் பிரதமரும் நடைமுறைப்படுத்துகிறார்கள் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

இதனைத்தான் கடந்த காலங்களிலும் சிங்களத் தலைமைகள் ஓயாமல் செய்து வந்தன. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு தமிழர்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த இந்த ஜனாதிபதியும் பிரதமரும் கூட மீண்டும் இதனையேதான் செய்கிறார்கள்.

எந்தவொரு சிங்களத் தலைமையும் ஒருபோதும் தமிழர்களுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை என்ற தலைவர் பிரபாகரனின் நம்பிக்கை பொய்த்துப்போய்விடவில்லை என்பதை இப்போதும் நேரடியாகக் காண்கிறோம்.

இந்த ஜனாதிபதியும் பிரதமரும் கூட தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்துகிறார்கள். ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்புக் கொடுக்க
முடியுமாயின் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்புக் கொடுக்க முடியாது? ஏனென்றால் அதற்கு அவர்களுக்கு மனமில்லை.

தமிழ்க் கைதிகளை விடுவித்தால் எதிரணியினர் அதனைச் சிங்கள மக்களிடம் தவறாக வியாக்கியானப்படுத்திவிடுவார்கள் என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறார்கள். இப்படித்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

ஜனாதிபதி நினைத்தால் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாகூடக் கூறுகிறார்.

தான் ஜனாதிபதியானால் 12 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பேன் என்று அவர் அளித்த ஒரே வாக்குறுதிக்காகத்தான் தமிழர்கள் அப்போது அவருக்கு வாக்களித்தார்கள். மைத்திரிபால சிறிசேனவையும் அதே இணக்கப்பாட்டோடுதான் ஆதரித்தார்கள். ஆனால், அவர் ஏமாற்றிவிட்டார்.

இப்போது பிரச்சினை பூதாகாரமாகி உண்ணாவிரதப் போராட்டம், கடையடைப்புப் போராட்டம் என்று மீண்டும் பழைய நிலைமையை நோக்கி தமிழர் தரப்பு நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை ஆரம்பித்து வைத்தவர் ஜனாதிபதி மைத்திரிபாலவே. இது இப்படியே போனால் விளைவுகள் விபரீதமாகிவிடும். அதற்கு முன்பாக இதற்கு நல்லதொரு தீர்வு காணப்படவேண்டும்” – என்றார் அவர்.

-http://www.tamilwin.com

TAGS: