அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் நல்லதொரு பதிலை தராவிட்டால் எமது போராட்டம் வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் இன்று முன்னொடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குறித்த ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. எமது மக்கள் பூரண ஆதரவை உணர்வு ரீதியாக வழங்கியுள்ளனர்.
இந்த வகையில் நூறு வீதமாக வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் முஸ்ஸிம் மக்கள் இணைந்து இந்த ஹர்த்தாலுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனியார் போக்கு வரத்துச்சங்கம், முச்சக்கர வண்டி சங்கம், மீனவ சங்கங்கள், வர்த்தக சங்கம், மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பொது நிலையினர் என பலதரப்பட்டவர்கள் இணைந்து மன்னாரில் இடம் பெற்ற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வடக்கு- கிழக்கில் வாழுகின்ற தமிழ் முஸ்ஸிம் மக்கள் இணைந்து இந்த பாரிய வெற்றியைத் தந்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு பல கோடி நஸ்டம். அதே வகையிலே இலங்கை அரசாங்கத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் பாரிய அழுத்தத்தை இன்றைய தினம் கொடுத்துள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆகவே இலங்கை அரசாங்கம் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வழங்கிய வாக்குறுதிகளை சரியான முறையில் செயற்படுத்த வேண்டும் என்பது தான் பிரதான நோக்கமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையிலே எல்லோறும் நிமிர்ந்து நிற்கின்ற வகையில் இன்றைய தினம் பாரிய வெற்றியை உணர்வு ரீதியாக எமது மக்கள் தந்திருக்கின்றார்கள்.
சிறைகளில் உள்ள எமது அரசியல் கைதிகளுக்காக மேற்கொண்டுள்ள இந்த ஹர்த்தால் நடவடிக்கை அவர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம்.
இந்த வெற்றியானது சிறையிலே இருக்கின்ற அரசியல் கைதிகளுக்கு சமர்ப்பனமாக நாங்கள் இதை செய்திருக்கின்றோம்.
எதிர் வரும் திங்கட்கிழமை (16-11-2015) அரசாங்கம் நல்ல பதிலை கூறுவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் நல்ல பதிலை அரசாங்கம் கூறாது விட்டால் எமது போராட்டம் வேறு வேறு வடிவுகளில் முன்னெடுக்கப்படும்.
எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்து கடந்த பல வருடங்காலமாக தமது வாழ்க்கையை சிறையில் கழித்த எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
வடக்கு கிழக்கில் இடம் பெற்ற ஹர்த்தாலின் ஊடாக சர்வதேசத்தின் பார்வை எமது அரசியல் கைதிகளின் பக்கம் திருப்பப்பட்டுள்ளது என்பதனை கூறிக்கொள்ளுகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com