பரிஸ் தாக்குதல் திட்டமிடல் பிசுபிசுத்ததால் தப்பியது யார்…?

hollandeபரிஸ் நகர தாக்குதல் உலகின் பல பாகங்களையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் வரலாற்றில் அன்றைய தினம் கறுப்பு வெள்ளியாக பதிவானதுடன் தாக்குதலாளிகளின் திட்டம் நிறைவேறினாலும் பிரதான இலக்கு தவறியமை குறிப்பிடத்தக்கது.

அரபு நாடுகளில் மேற்குலக நாடுகள் போர் தொடுப்பதும் தொடுத்துக்கொண்டிருப்பதும் யாவரும் நன்கறிந்த விடயம். அதனது தாக்கமே பரிஸ் நகரை தீவிரவாதிகள் இலக்கு வைக்க பிரதான காரணம் எனலாம்.

பரிஸ் நகரத்தின் மீதான தாக்குதல் உலக ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய சவால் என்பதுடன் வன்மையான கண்டனத்துக்குரியது என்பதிலும் மாற்றமில்லை.

ஆனாலும் மேற்கு நாடுகளில் சுயநலத்தின் தன்மை தீவிரவாதத்தை அழிக்கவென கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டதன் விளைவுகள் ஒவ்வொரு மேற்கு நாடுகளிலும் நேரடி தாக்கமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதற்காக தீவிரவாதத்தை அழிக்க முற்படுவது தவறல்ல. மாறாக வல்லரசு நாடுகளின் போட்டாபோட்டிகளின் தீவிரவாதத்தை வளர்க்க பிரதானமான காரணம் எனலாம். இதற்கு சிறந்த உதாரணம் ஒசாமா பின்லேடனை வளர்த்தது மேற்குலகம். அதனால் ஏற்பட்ட விளைவுகளை அனுபவித்ததும் மேற்குலகமே.

குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வளர்ந்தது அல்ல. மாறாக ஒருசில மேற்குலக நாடுகளின் சுயநலத்திற்காக வளர்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

இக்கூற்று சிலருக்கு பிழையாக தெரிந்தாலும் நடைமுறை உலகில் நாட்டாண்மை தன்மை அதிகரிப்பதற்காக காலாகாலங்களுக்கு புதுப் புதுப் பெயர்களுடன் தீவிரவாத குழுக்களை வளர்ப்பது மேற்குலகின் ஏகபோக அரசியல் சுயநலம் ஆகும்.

உலகை அதிரவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பின்னணியிலும் உலகின் பலமான நாடு உள்ளது என்பதனை ஆதாரப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நாட்டின் பெயரை வெளிப்படுத்துவது சாலச் சிறந்தது எனலாம்.

பரிஸ் நகர தாக்குதல் முறையைப் பார்க்கையில், பல திட்டமிடல் எதிர்பார்ப்புக்கள் தாக்குதலாளிடம் இருந்ததுடன் தாக்குதலாளிகளின் பிரதான இலக்கு தவற விடப்பட்டுள்ளனை புலனாய்வு வாயிலாக புலப்படுகிறது.

தாக்குதல்தாரிகளின் பிரதான இலக்காக பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி கொலான்டி (Francois Hollande) இருந்தமை உறுதிப்படுத்தப்படுவதுடன் அதில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமை தீவிரவாத அமைப்புக்கு பாரிய ஏமாற்றமாகும்.

காரணம் உதைப்பந்தாட்ட போட்டியை பிரான்ஸ் ஜனாதிபதி பார்வையிட வருகின்றமை தாக்குதலாளிகளால் அறியப்பட்டிருந்தாலும் அவர் மீதான இலக்கு தவறியமை எதிர்காலத்தில் பரிஸ் நகரத்தில் இன்னும் சில தாக்குதல்களை தீவிரவாத அமைப்புக்கள் நடாத்தக்கூடும் என முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தாக்குதல் நடாத்தியவர்களிடம் பாரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும், அவ் இலக்கு தவறியமையால்,  மாறாக மனித உயிர்களை பலியெடுப்பதே தம் பிரதான இலக்கு என்பதை வெளிப்படுத்தியதுடன் அவர்களின் ஆத்திரம் அப்படியே அமைந்திருக்கின்றது.

இதற்கு அவர்கள் கூறும் காரணம் இஸ்லாமிய நாடுகளை  தீவிரவாதம் என்னும் போர்வையில் மேற்குலகம் அழிக்க நினைப்பதும் அதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதுமே தாக்குதலாளிகள் கூறும் காரணம் ஆகும்.

சர்வதேச தீவிரவாதம், பிரான்ஸ் பாதுகாப்பு பிரிவில் இராணுவம், மற்றும் புலனாய்வுத் துறைக்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளமை தெளிவாக புலப்படுகிறது.

உலக வல்லரசுகளின் ஒன்றாக திகழும் பிரான்ஸ் தன் நாட்டின் பாதுகாப்பில் அசண்டையீனமாக இருந்தமையே இவ்வாறான பாரிய தாக்குதலுக்கு காரணம் எனலாம்.

ஆனாலும் பிரான்ஸ் குடிசார் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் இடம்பெற்ற தினமாகிய வெள்ளிக்கிழமை காலை வழமைக்கு மாறாக பிரான்ஸ் நகரின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இத் தாக்குதல் அன்று மாலை இடம்பெற்றுள்ளமை பிரான்ஸ் பாதுகாப்பில் தரப்பினரின் பலவீனத்தையே வெளிக்காட்டுகிறது.

அவ்வாறெனில் பிரான்ஸ் நாட்டின் இராணுவ, மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புக்களை மறுசீரமைக்க வேண்டிய தேவை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகளின் பிரதான இலக்குகள் தவறவிடப்பட்டமைக்கு பாதுகாப்பு தரப்பினர்களின் கெடுபிடிகளால் ஏற்பட்ட பீதியே காரணம் எனலாம்.

இவைகளின் அடிப்படையில் பாரிய அழிவிலிருந்து பரிஸ் நகரம் தப்பி இருப்பதுடன் தாக்குதலாளிகளின் பாரிய திட்டங்களும் பிசிபிசுத்துள்ளமை தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.

தீவிரவாதிகளின் கூற்றுப்படி அவர்களின் ஆக்ரோஷம் தணிந்ததாக தெரியவில்லை. எனவே பிரான்ஸ் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் தத்தம் இராணுவ, புலனாய்வு உட்கட்டமைப்புக்களையும், எல்லைப்புற பாதுகாப்புக்களை அதியுச்ச நிலையில் வைத்திருக்க வேண்டியதுடன் மக்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் தீவிரவாதிகளிடமிருந்து நாடுகளையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு மிகப் பெரிய உத்தி  எனலாம்.

கே.ராக்கி
[email protected]

-http://www.tamilwin.com