பயங்கரவாதத் தடைச் சட்டம் துயரங்களையே தந்துள்ளது! – மனித உரிமை ஆணைக்குழு தலைவர் தீபிகா

deepikaஇலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் அது ஏற்படுத்தப்பட்ட நோக்கங்களுக்குப் பதிலாக துயரங்களைப் பல மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து ஆணைக்குழு ஆராயும் அரசுக்கும் இது குறித்து ஆலோசனைகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசுக்கு நல்லிணக்கம் மற்றும் இடைமாறுபாட்டுக்கால நீதி ஆகியவற்றை ஏற்படுத்தும் விடயங்களில் தங்கள் ஆணைக்குழு ஆலோசனையை வழங்கப்போவதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவித்ததாவது:-

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீன மனித உரிமைகள் ஆணைக்குழு இது . இதற்கு விசேடமான சில கடப்பாடுகள் உள்ளன. மேலும், சுயாதீன மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்து மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக்
கொண்டுள்ளனர். இதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

காலஞ் சென்ற பௌத்த மதகுரு மாதுளுவாவே சோபித தேரர் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற மக்கள் அபிப்பிராயம் உருவாவதற்குக் காரணமாகக் காணப்பட்டார். அதற்குத் தலைமை தாங்கினார். அவருக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம்.

19ஆவது திருத்தம் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்களுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் எங்களுக்கு அதிகாரங்கள் இல்லை எனக் கருதுகின்றனர். ஆனால், மக்கள் முறைப்பாடு செய்யாமலேயே விசாரணைகளை
ஆரம்பிக்கக்கூடிய அதிகாரங்கள் எங்களுக்கு உள்ளன. இதனடிப்படையில் நாங்கள் சில தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டுள்ளளோம்.

மக்கள் தங்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வரை நாங்கள காத்திருக்கப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும். அதேவேளை, பொருளாதார கலாசார உரிமைகள் குறித்தும் தீவிர அக்கறையை வெளிப்படுத்துவோம்.

நாங்கள் அரசுக்கு ஆலோசனை வழங்குவோம். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் நாங்களும் ஆற்றவேண்டிய பங்களிப்புள்ளது. நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்று நீதி தொடர்பாக நாங்கள் அரசுக்கு ஆலோசகைனளை வழங்குவோம். நல்லிணக்கம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்குவோம்.

இலங்கை சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதையும், தான் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகளின்படி தனக்குள்ள கடப்பாடுகளை நிறைவேற்றவும் நாங்கள் ஆலோசனை வழங்குவோம். இலங்கையில் தற்போது புதிய அரசமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. பல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்த விடயத்திலும் நாங்கள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்புள்ளது. நாங்கள் ஆலோசனையை வழங்குவோம். மக்களின் உரிமைகளைப்
பாதுகாப்பதற்கு புதிய அரசமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்குவோம்.

சிவில் சமூகத்தினருடன் இணைந்து நாங்கள் செயற்படுவோம். அவர்களை எங்கள் எதிரிகளாக நாங்கள் கருதப்போவதில்லை.

நாங்கள் நடைமுறையில் உள்ள பல சட்டங்கள் குறித்து ஆராயப்போகின்றோம். இதில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்று. பாதுகாப்பு தொடர்பான சட்ட மூலங்கள் அவசியமானவை. ஆனால், அவை மனித உரிமைகளை கருத்தில்கொள்பவையாகக் காணப்படவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் எந்தவித பயனும் ஏற்படவில்லை. மாறாக அது துயரங்களை மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது. மரண தண்டனைக்கு எதிராகவும் நாங்கள் ஆலோசனை வழங்குவோம். உலகின் எந்த நாட்டிலும் மரண தண்டனைக்கு பின்னர் குற்றங்கள் குறைந்த வரவாறு இல்லை.

நாங்கள் எங்களுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி தலையிட நினைத்த முதல் விடயம்  சமீபத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். நாங்கள் உடனடியாகப் பொலிஸாரை விசாரிப்பதற்குத் தீர்மானித்தோம்.

மாணவர்களும் அவர்களது நலனில் அக்கறைகொண்டுள்ள அமைப்பொன்று இது குறித்து எங்களுக்கு முறைப்பாடு செய்திருந்தன. எனினும், அதற்கு முதலே நாங்கள் விசாரணைகளை மேற்கொள்வது எனத் தீர்மானித்தோம். நாங்கள் விசாரணைகளை
மேற்கொண்டோம். தற்போது விசாரணைகள் முடிவடைந்துள்ளன, எங்களது பரிந்துரைகளைத் தயார் செய்து வருகின்றோம்  என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: