இலங்கை முன்னேற்றப் பாதையில்! பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றது ஐரோப்பிய ஒன்றியம்

srilanka_un_001சிறையில் உள்ளவர்களை விடுவித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த பின்னர் இலங்கையில் முன்னேற்றக்கரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீண்டும் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதித்தது.

எனவே கடந்த ஜனவரியில் இருந்து இலங்கையில் அரசியல் மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளன. இந்தநிலையில் தற்போது புதிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இலங்கை நல்லிணக்கத்தை முன்கொண்டு செல்லமுடியும். அத்துடன் பொருளாதார முன்னேற்றத்துடன் வறுமையையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

ஜெனீவா உடன்படிக்கையை இலங்கை அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டமையானது இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கையில் உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் இணங்கியமை, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணர்களை கொண்டு காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவ இணங்கியமை என்பன முன்னேற்றமான விடயங்களாகும்.

இதேவேளை பொறுப்புக்கூறலின் மூலம் அனைத்து சமூகங்களும் இலங்கையின் சட்டத்தையும் ஒழுங்கையும் நம்பக்கூடிய நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைக்காக உள்நாட்டு பொறிமுறை அமைக்கப்படும் போது அதில் வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளடக்கப்படுவது. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும்.

வடக்கு கிழக்கில் அதிகாரத்தை பரவலாக்கம் செய்தல், 13வது திருத்தத்தை அமுல் செய்தல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்தல் உட்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் முக்கிய முன்னேற்றங்களாக இருக்கின்றன.

இந்தநிலையில் ஐரோப்பிய ஆணையகம் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கான ஆதரவை வழங்குமாறு ஒன்றியம் கோரியுள்ளது.

அத்துடன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் அடிப்படையில் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடல் உற்பத்தி ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்றும் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: