ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தி 224 பேர் பலியான கொடூர சம்பவம் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 50 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த Airbus A 321 என்ற விமானம் கடந்த அக்டோபர் 31ம் திகதி எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 224 பேரும் கொடூரமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்ற நிலையில், ‘நடுவானில் விமானம் குண்டு வீச்சுக்கு உள்ளாகி விபத்தை சந்தித்துள்ளது’ என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியது.
இதனை தொடர்ந்து, ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு துறையின் தலைவர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விமானத்தை தாக்கிய அல்லது தாக்குதலுக்கு உதவியவர்களை பற்றி அரசுக்கு துப்பு கொடுப்பவர்களுக்கு 50 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் விமானத்தை தாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சர்வதேச நட்பு நாடுகளின் உதவியை பெறுமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவு பிறபித்துள்ளார்.
விமான ஊழியர்கள் இருவர் அதிரடி கைது
சற்று முன்னர் வெளியான தகவலில், ரஷ்ய விமானத்தை தாக்குவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் வகையில் எகிப்தில் உள்ள Sharm el-Sheikh விமான நிலையத்தை சேர்ந்த 2 ஊழியர்களை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக எகிப்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய விமானத்தை தாக்கியது தொடர்பாக 17 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களில் 2 பேர் தாக்குதலுக்கு உதவியதாக சந்தேகம் வலுவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com