தேசிய இனப்பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக
மக்களுக்கும் தனியான அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை
அறியும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்திலேயே மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட லோரன்ஸ்,
ஜெனிவாத் தீர்மானத்தை ஏற்பதாக அரசு உறுதி வழங்கியுள்ளது. எனவே, அதில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச நீதிபதிகள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்பைப் பெறுவது சிறந்ததாக அமையும். இதுபற்றி அரசு சாதகமாக பரிசீலிக்கவேண்டும்.
அதேவேளை, அரசியல் தீர்வு பற்றியும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பிரச்சினைகள்
உருவாவதற்கு இனப்பிரச்சினைதான் முக்கிய காரணம். ஆகவே, அதற்குத் தீர்வு காணப்படவேண்டும்.
இவ்வாறு அரசியல் தீர்வு காணப்படும்போது மலையக மக்களும் பங்குதாரர்களாக உள்வாங்கப்படவேண்டும். அவர்களுக்கும் தனி அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றார்.
-http://www.tamilwin.com

























