ஜிகாதிகளின் கொடூர தாக்குதலில் 5 பேர் பலி: 170 நபர்களை பிணையக்கைதியாக வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல்

radisson_blu_001மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் புகுந்த ஜிகாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்திவிட்டு 170 நபர்களை பிணையக்கைதியாக வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பமாகோ நகரில் அமைந்துள்ள ராடிசன் என்ற ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய ஜிகாதிகள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

190 அறைகள் கொண்ட அந்த ஹொட்டலுக்குள் நுழைந்த ஜிகாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளதாகவும் அங்குள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொடூரமான தாக்குதலில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 170 நபர்களை ஜிகாதிகள் பிணையக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிணைக்கைதிகளில் 140 பேர் ஹொட்டலில் தங்கியுள்ளவர்கள் என்றும், 30 பேர் ஹொட்டல் ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது ஹொட்டலின் 7வது மாடியில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளதாகவும், அப்பகுதி முழுவதையும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தீவிரவாத தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ளனரா அல்லது அந்நாட்டிலுள்ள போகோஹரம் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனரா என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டாம் இணைப்பு

மாலி நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சற்று முன்னர் வெளியிட்டுள்ள தகவலில், ‘குரான் வாசகங்களை ஒப்பிவிக்கும் நபர்களை மட்டும் ஜிகாதிகள் விடுதலை செய்து வருவதாக’ தெரிவித்துள்ளனர்.

பிணையக்கைதியாக வைக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ’ஜிகாதிகளின் பிடியில் தானும் அகப்பட்டுள்ளதாக’ அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு கைப்பேசி மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

எனினும், ஹொட்டலின் 7வது மாடியில் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள நபர்களின் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகமல் இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Image Source: AFP

-http://world.lankasri.com