மாலியில் கொடூர தாக்குதலில் 27 பேர் பலி…பிணையக்கைதிகள் மீட்பு: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

radisson_blu_001ஜிகாதிகளின் பிடியில் இருந்த பிணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும்,தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காம் இணைப்பு:

தற்போதைய நிலவரப்படி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  27  பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் பிடியில் இருந்த பிணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் இணைப்பு:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ராடிசன் ஹொட்டலில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதிகள் 170 நபர்களை பிணையக்கைதிகளாக சிறை பிடித்துள்ளனர். இவர்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஹொட்டலை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், ஜிகாதிகளின் பிடியில் இருந்து 80 நபர்களை ஹொட்டலை விட்டு வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எஞ்சிய பிணையக்கைதிகளில் சீனா மற்றும் இந்திய நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளனர் என தெரிகிறது.

மேலும், ஹொட்டல் தாக்குதலை தொடர்ந்து மாலி நாட்டிற்கு செல்ல இருந்த அனைத்து விமானங்களையும் பிரான்ஸ் நாடு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு  அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல்- மொரபிட்டவுன் (Al- Mourabitoun)  பொறுப்பேற்றுள்ளது.

இரண்டாம் இணைப்பு

மாலி நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சற்று முன்னர் வெளியிட்டுள்ள தகவலில், ‘குரான் வாசகங்களை ஒப்பிவிக்கும் நபர்களை மட்டும் ஜிகாதிகள் விடுதலை செய்து வருவதாக’ தெரிவித்துள்ளனர்.

பிணையக்கைதியாக வைக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ’ஜிகாதிகளின் பிடியில் தானும் அகப்பட்டுள்ளதாக’ அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு கைப்பேசி மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

எனினும், ஹொட்டலின் 7வது மாடியில் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள நபர்களின் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகமல் இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு:

பமாகோ நகரில் அமைந்துள்ள ராடிசன் என்ற ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய ஜிகாதிகள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

190 அறைகள் கொண்ட அந்த ஹொட்டலுக்குள் நுழைந்த ஜிகாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளதாகவும் அங்குள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொடூரமான தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும், 170 நபர்களை ஜிகாதிகள் பிணையக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிணைக்கைதிகளில் 140 பேர் ஹொட்டலில் தங்கியுள்ளவர்கள் என்றும், 30 பேர் ஹொட்டல் ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது ஹொட்டலின் 7வது மாடியில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளதாகவும், அப்பகுதி முழுவதையும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிகாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளவர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும், பிரான்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

Image Source: AFP

-http://world.lankasri.com