திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முகாம் தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், குறித்த முகாமில் சித்திரவதைகள் இடம்பெற்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக இந்த முகாம் குறித்து ஐக்கிய நாடுகளின் குழுவினருக்கு எவ்வாறு தெரியவந்தது என்பது தொடர்பில் சந்தேகங்கள் இருந்தன.
எனினும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளினால் முன்னதாக அமைக்கப்பட்ட தாருஸ்மான் குழுவில் ஒருவராக இருந்த யஸ்மீன் சூக்காவே இந்த முகாம் தொடர்பிலான தகவலை இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் குழுவினரிடம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு ஏற்கனவே இந்த முகாம் அமைந்திருந்த இடம், அந்த முகாமில் இருந்த அதிகாரிகள், சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள், முகாமுக்கு காவலாளியாக இருந்தவர் உட்பட்ட பல தகவல்களை காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழுவினரிடம் வழங்கியிருந்தது.
இந்தநிலையில் 2008ம் ஆண்டு கொழும்பில் இருந்து குறித்த முகாமுக்கு கடத்தி வரப்பட்ட 11 பேர் தொடர்பில் விசாரணை செய்யும் சிஐடி அதிகாரியையும் ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவினர் சந்தித்துள்ளனர்.
அத்துடன், இந்த முகாமுக்கு ஆட்களை கொண்டு செல்லப்பட்ட யாழ்ப்பாணம், பருத்தித்துறையை சேர்ந்தவர்களின் தகவலையும் சூக்கா வழங்கியுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை முகாம்( (GPS: 8’33’26’13 N, 81’14’32’87 E) மற்றும் அந்த முகாமில் இருந்த அதிகாரிகளின் தகவலையும் அதற்கான சாட்சிகளையும் சூக்கா, ஐக்கிய நாடுகள் சபையினரிடம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் திருகோணமலை வதைமுகாமில் கடமையாற்றிய 10 கடற்படை அதிகாரிகளின் பெயர்களையும் சூக்காவின் குழு வெளியிடவுள்ளது.
அத்துடன் அந்த வதை முகாமில் இருந்து மீண்டவர்> காவலாளி ஆகியோரின் பெயர்களையும் அது வெளியிடவுள்ளது.
இந்த முகாம் சம்பவத்தில் இரண்டு கடற்படை புலனாய்வு பிரிவினரும் உள்ளடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த முகாமின் இயக்கம் தொடர்பில் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை என்று ஐக்கிய நாடுகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த முகாமைப்போன்று மேலும் முகாம்கள் இருந்தால் அவற்றை நீதிமன்றங்களின் ஊடாகவே சோதனையிட முடியும் என்று இலங்கையின் சீஐடியினர் தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com