மாலியின் தலைநகர் பாமகோவில் ஒரு ஹோட்டல் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலையடுத்து அந்நாட்டில் பத்து நாட்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்நாட்டின் அதிபர் இப்ராஹிம் பௌபக்கர் கெய்டா, மூன்று நாட்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சாட் நாட்டில் ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த அதிபர், தன் விஜயத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இந்த மோதல்களில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அல் – காய்தாவுடன் இணைந்து செயல்படும் அமைப்பான அல் – முராபிதவுன் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.
பயங்கரவாதிகள் பாமகோவில் இருந்த ராடிஸன் ப்ளூ ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து, மாலியின் சிறப்புப் படையினர், ஃப்ரான்ஸின் சிறப்புப் படையினர், பணியில் இல்லாத அமெரிக்கப் படையினர் ஆகியோர் தாக்குதலைத் துவங்கினர். இதையடுத்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 130க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மீட்கப்பட்டனர். -BBC