தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியதைப் பெற்றுத் தருவோம்; விக்னேஸ்வரனிடம் சமந்தா பவர் தெரிவிப்பு!

saman-100x80தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்து பெற்றுத் தருவோம் என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர்,

தம்முடனான சந்திப்பில் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்த சமந்தா பவருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது சந்திப்பு மிகவும் நன்மை பயக்குமென எதிர்பார்க்கின்றோம். அவர் உலகில் மிக வலுவான நாட்டினுடைய பிரதிநிதியாகவும், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் அனைத்துக் கொள்ளும் பாரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகவும் இருப்பதால், அப்படியான ஒருவருடன் பேச கிடைத்ததை பெரிய வாய்ப்பாக கருதுகின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார். இலங்கையில் ஜனநாயகத்தினை வரவழைக்க வேண்டும் என்பதுடன், அமெரிக்காவும் ஜனநாயக நாடு என்பதில் இலங்கையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் சந்தோசப்படுவதாகவும், தம்மாலான சகல உதவிகளையும் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

முன்னர் இருந்த சற்று எதேச்ச அதிகாரமான வாழ்க்கை முறை மாற்றமடைந்து வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களும் மக்களும், அந்த தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.

எம்மைத் பொறுத்த வரையில், எம்மைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இராணுவத்தினர் எம்மத்தியில் இருந்து, எமது வாழ்வாதாரங்களைப் பிடிங்கிக்கொண்டும், காணிகளைப் பிடிங்கிக்கொண்டும். வீடுகளைப் பிடிங்கிக்கொண்டு இருப்பது எமக்கு தொந்தரவினையும், பிரச்சினையும் தருகின்றது. 6 வருடங்களின் பின்னரும், இவ்வாறு நடப்பது எமக்கு மனவருதத்தினைத் தருகின்றது என்ற கருத்தினை தெரிவித்திருந்தோம்.

முன்னையதையும் பார்க்க தற்போது, தமது முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும், தமது தகவல் சேரிக்கும் பணிகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையில், தமிழ் மக்கள் அனைவரையும் உட்புகுத்தி, பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் செயல் புரிந்து வருவது எமக்கு வேதனை தருகின்றது என்ற கருத்தினை முன்வைத்திருந்தோம்.

பாதுகாப்பின் நிமித்தம் தற்போது கூட மிகப்பாரிய தொகையினை பாதீட்டில் வழங்குவதாகவும், இவற்றை எல்லாம் எமக்கு நன்மை பயக்க கூடிய வகையில், பணத்தினை பகிர்ந்து கொண்டிருக்கலாம் தானே என்றும் மத்திய மாகாணத்தினை விட பின்தங்கிய நிலையில் இருப்பதால், எமக்கு கூடிய உதவிகள் தேவை என்பதனையும் எடுத்துக் கூறினோம்.

இவ்வாறு பல விடயங்களை எடுத்துக் கூறிய போது அவர் அவற்றினை ஏற்றுக்கொண்டார். அதேவேளை, உங்களின் பிரச்சினைகளை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்போம் என்ற உத்தரவாத்தினையும் தந்தார்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: