உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வலுப்பெறுவதற்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற கொள்கைகளே காரணம் என ரஷ்ய பிரதமர் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என பல்வேறு தரப்பினரிடையே கருதப்பட்டது.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது போன்று இருநாடுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசிய உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய இருநாடுகளின் தலைவர்களின் வார்த்தை யுத்தம் இதனை உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக குற்றம் சாட்டிய ஒபாமா
கூட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பாக ஆலோசனை நடந்தபோது ஒபாமா ரஷ்ய நாட்டின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அப்போது பேசிய ஒபாமா, சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதை தவிர்த்து, அந்நாட்டு ஜனாதிபதியின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராளிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
சிரியா ஜனாதிபதியான ஆசாத் தனது பதவியிலிருந்து விலகும் வரை அங்கு பிரச்சனை தீராது. ஆனால், தனது நாட்டு மக்களை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படாமல் ஆசாத்திற்கு ஆதரவாக செயல்படுவது இருநாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் மாற்றத்தை தான் காட்டுவதாக ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்டு அஞ்சாமல் இருப்பதே அவர்களுக்கு எதிரான உறுதியான ஆயுதம். பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சாதகமாக முடிந்துவிடும்.
ஏற்கனவே கூறியது போல், ஐ.எஸ் தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் நிச்சயம் முறியடிக்கும் என ஒபாமா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஒபாமாவை சரமாரியாக தாக்கி பேசிய ரஷ்ய பிரதமர்
ஒபாமாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசிய ரஷ்ய நாட்டு பிரதமரான Dmitry Medvedev, ஒபாமா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் வலுப்பெற்று வருவதற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பொறுப்பற்ற கொள்கைகள் தான் காரணம் என கூறியுள்ளார்.
தனது கூட்டணி நாடுகளுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதில் கவனத்தை செலுத்தாமல், சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சிரியா ஜனாதிபதிக்கு எதிராக அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சிரியா, ஈராக், எகிப்து, அமெரிக்க என எந்த நாடாக இருந்தாலும், அனைத்து சட்டவிதிகளையும் பின்பற்றி தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர எதிராக செயல்படக்கூடாது என குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து பேசிய அவர், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா, இதுவரை 600க்கும் அதிகமான தீவிரவாதிகளை அழித்துள்ளது.
மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சட்டவிரோதமாக வருமானத்தை தரும் சுமார் 1,000 எண்ணெய் லொறிகளை அழித்துள்ளதாக ரஷ்ய பிரதமர் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com

























