பாரிஸ் தாக்குதலை அடுத்து ஐரோப்பா முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாரிஸ் தாக்குதல் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் பிரான்ஸ் அரசுக்கு சுமார் 1.4 பில்லியன் பவுண்டுகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால் வணிகரீதியில் பாதிப்புகள் வராமல் தடுக்கும் நோக்கில் அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமாக செலுத்தினால் போதுமானது எனவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே வணிக உரிமையாளர்களுக்கு பெருந்தொகைகளை சலுகையாக வழங்கியும், பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் காக்கும் பொருட்டும் துரித நடவடிக்கைகள் பல அரசு மேற்கொண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாரிஸ் நகரில் செயல்பட்டுவரும் பல உணவு விடுதிகளில் செய்யப்பட்டிருந்த முன்பதிவுகளை சுற்றுலா பயணிகள் ரத்து செய்துள்ளதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து 6 நாட்கள் அனைத்து வணிகவளாகங்கள், பள்ளிகள் என மூடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 36 மில்லியன் பவுண்டுகள் வரை இழப்பு நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தாலியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2 வாரங்களாக 50 சதவிகிதம் குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு களைகட்டவேண்டிய வணிகவளாகங்கள், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக களையிழந்து காணப்படுவதாக பெர்லின் நகர வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com