பாரீஸில் பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு தொடக்கம்: 147 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

cop21_001சர்வதேச அளவில் பருவநிலை மாற்றதிற்காக சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தொடங்கியுள்ளது.

பாரீஸில் உள்ள Le Bourget என்ற பகுதியில் சற்று முன்னர் விமர்சையாக தொடங்கியுள்ள இந்த மாநாடு எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளிடையே சிறப்பான உடன்பாட்டிற்கு வரவுள்ளதால், இந்த மாநாடு தற்போது முக்கியம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

147 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு மூலமாக 195 நாடுகளிடம் ‘சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் கார்பன் வாயுவை வெளியிடுவதை குறைக்க’ வலியுறுத்தப்படும்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக Mission Innovation என்ற திட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுப்பதற்கு செலவிடப்படும் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்க வலியுறுத்தப்படுவார்கள்.

அதேபோல், உலக வங்கியின் உதவியுடன் கார்பன் வாயு வெளியீட்டை குறைக்க உதவும் வகையில் வளரும் நாடுகளுக்கு சுமார் 500 மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் வழங்க உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளதால், பாரீஸ் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com