ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல் 31-ம் வரை நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் ‘நாடு கடந்த தமிழீழம்’ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தொடங்கி வைத்த கமான்வெல்த் மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 54 நாடுகள் கலந்துகொண்டன. இதில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிக்கும் உட்கார ஒரு நாற்காலி கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
காமன்வெல்த் மாநாட்டில் தமிழீழ மக்களின் சார்பாக, நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதி கலந்துகொள்வது, இலங்கையில் அமைய இருக்கிற தமிழீழ அரசுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம். இம்மாநாட்டில் பேசும்போது, “இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பாக விசாரிக்க வேண்டும்” என்று கோரினேன் என்கிறார் அம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறைத் துணை அமைச்சர் மாணிக்கவாசகர்.
போர்க் குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டும் என்ற தீர்மானமும் இதில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்படி ஒரு ஆணையத்தை அமைக்க இந்தியா, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இலங்கை எதிர்ப்பது ஆச்சரியமல்ல. ஆனால், காந்தி அடிகள் இந்தியாவிலும் தென்னாபிரிக்காவிலும் எந்த மனித உரிமைகளுக்காகப் போராடினாரோ அவர் சம்பந்தப்பட்ட நாடுகளே மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையத்தை எதிர்த்தது, எவரும் எதிர்பாராத, வருத்தமான ஒன்று.