வட பகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும், அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டே பல சதிகள் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
முதலமைச்சரின் முழு உரை பின்வருமாறு,
மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் திறப்பு விழாவிற்கு என்னை அழைப்பதற்கு உங்கள் கல்லூரியின் அருட்சகோதரி அவர்கள் தச்சனாமருதமடு நடமாடுஞ் சேவைகள் நிலையத்திற்கு நான் பிரசன்னமாயிருந்த வேளையில் அவ்விடத்திற்கு வந்திருந்தார்.
அவர் என்னை அழைத்த போது எனக்கு மறுப்புக்கள் தெரிவிக்க முடியவில்லை சம்மதம் தெரிவித்து விட்டேன்.
இன்னுமொரு காரணமும் இருந்தது. மன்னார் பிரதேசத்தில் உள்ள முருங்கன் பகுதியில் நான் எந்தவொரு கூட்டங்களுக்கும் அண்மையில் சமூகம் அளிக்காத காரணத்தினால் சென்ற மாதம் 27ந் திகதிய கூட்டத்திற்காவது நான் சமூகம் அளிப்பது பொருந்தும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எம்மை ஏமாற்றி விட்டன. அன்று இந்த விழாவை நடத்த முடியவில்லை.
நான் முதலமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இப் பகுதியை வந்து பார்க்கவில்லை, இப் பகுதியில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்கவில்லை என்ற ஆதங்கம் எனது மனதை உறுத்தியவாறே இருந்தன. இன்று அந்த ஆதங்கம் நீங்கிவிட்டது.
என்றாலும் ஒன்றைக்கூறக் கடமைப் பட்டுள்ளேன். நான் இங்கு நேரடியாக வராத போதிலும் இவ்விடத்தில் வாழக்கூடிய மக்களின் பிரச்சனைகள் பற்றியும் இப்பாடசாலையின் அபிவிருத்தி பற்றியும் செய்திகள் கிடைத்த வண்ணமே இருந்தன.
எனினும் குறைகளை நேரடியாகக் கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதற்கொரு சந்தர்ப்பம் இன்று கிடைத்துள்ளது.
அதற்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பகுதி ஒரு சிறந்த விவசாய பூமியாகவும் நீர்ப்பாசனம் தாராளமாகக் கிடைக்கக் கூடிய வயல் நிலங்களைக் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் வடபகுதியில் காணக்கூடிய மிகப் பெரிய குளங்களில் ஒன்றான கட்டுக்கரைக் குளம் இப்பகுதியில் அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படலாம்.
எனக்கு இப்பொழுதும் நினைவிருக்கின்றது. 1951ம் ஆண்டில் றோயல் கல்லூரியில் எமக்கு இலங்கையின் வரைபடத்தைத் தந்து பல இடங்களையும், நதிகளையும், குளங்களையும் அதில் குறிக்கச் சொன்னார்கள்.
Giant’s Tank என்ற கட்டுக்கரைக்குளம் என்னால் மட்டும் சரியாக அடையாளம் இடப்பட்டது.
பாராட்டுப் பெற்றேன். இலங்கையின் மிகப்பெரிய குளங்களில் ஒன்று இந்த கட்டுக்கரைக் குளம். இப் பகுதியைச் சேர்ந்த கூடுதலான குடும்ப உறுப்பினர்கள் விவசாயத்தை நம்பி வருமானம் ஈட்டுவதையே மூல உபாயமாக கொண்டிருந்ததால்,
சில காலங்களுக்கு முன்னர் மேல்ப் படிப்பில் அவ்வளவாக அக்கறை காட்டாத நிலைமை இருந்து வந்ததாக அறிகின்றேன். அனைவரும் விவசாய நடவடிக்கைகளிலேயே கூடுதலாக ஆர்வம் காட்டினர்.
இப்போது அந்த நிலை மாறி விட்டதாக அறிகின்றேன்.
இப் பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவியர் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்க்கு ஈடாக ஏட்டிக்குப் போட்டியாக கல்வியில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இப்போது வயல்களில் வேலை செய்வதற்கு கூடுதலான மனிதவலு சேர்க்கவேண்டியதானது தேவையற்றதாகிவிட்டது.
உழுவதற்கு இயந்திரம், நாற்று நடுவதற்கு இயந்திரம், களைகளை அகற்றுவதற்கு களை நாசினிகள், அருவி வெட்டுவதற்கு அருவி வெட்டும் இயந்திரம் என அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் பிள்ளைகள் வயலுக்குச் செல்லத் தேவையில்லை என்ற நிலையில் படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார்கள்!
பொதுவாகவே கிராமப் புறங்களை சேர்ந்த மாணவர்கள் சற்று சுறுசுறுப்பானவர்கள். நேரகாலத்தோடு நித்திரை விட்டெழுதல், தோட்டங்களில் வயல்களில் மாட்டுத்தொழுவங்களில் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபடுதல், காலை உணவை முடித்துக் கொண்டு பொதுவாகச் சற்றுத் தூரத்தில் இருக்கும் பாடசாலைக்குச் செல்லுதல்,
மாலையில் திரும்பி வந்து ஆடு மாடுகளை அவற்றின் பட்டிகளிலுந் தொழுவங்களிலும் கொண்டு போய்ச் சேர்த்தல், தாய் தந்தையருக்கு உதவியாக வீட்டு வேலைகளைப் புரிதல், அதன் பின் வீட்டுப்பாடங்களைச் செய்தல் என பொழுதைப் பிரயோஜனமாக கழிக்கின்ற ஒரு பழக்கத்தினைக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு கிடைக்கக் கூடிய பசும்பால் சம்பந்தமாகவும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். மன்னார் பிரதேசத்தில் குறிப்பாக முருங்கன் பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய பாலில் புரதத்தின் அளவு எருமைப் பாலின் புரத அளவுக்கு ஒப்பானதாக அமைந்திருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
சிறு பிள்ளைகளினதும் மாணவர்களினதும் ஊட்டச்சத்தை வலுவூட்டுவதற்கு இங்கு உட்கொள்ளப்படும் பாலானது மிகச் சிறந்த ஒரு காரணியாக விளங்குகின்றது.
இதனால் தானோ என்னவோ இப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் மிகவும் முன்னணியில் இருக்கக் கூடிய உடல் வலுவைக் கொண்டிருக்கின்றார்கள்.
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கூட சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இவர்களின் விளையாட்டுத் திறமை வளர்ச்சியடைந்துள்ளது.
கல்வித் துறையிலும் தாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி பல மாணவ மாணவியர் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்குத் தேர்வாகி இருப்பதாகவும் அறிகின்றேன்.
இங்கே கல்விகற்பிக்கும் ஆசிரியர்களில் பலர் யாழ் மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து தங்கியிருந்து கல்வி கற்பிப்பதாகவும் அவர்கள் இங்கு தங்கியிருக்கின்ற நாட்களில் மாலை நேர வகுப்புக்கள்,
விடியற்காலை வகுப்புக்கள் என கூடுதலான நேரங்களை இம் மாணவ மாணவியரின் கல்விச் செயற்பாட்டிற்காகச் செலவழிப்பதன் மூலம் அவர்களின் கல்வி மட்டம், பரீட்சைகளில் அவர்கள் பெறக் கூடிய அடைவு மட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இங்குள்ள ஆசிரியர்களின் ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும்.
இன்று பிரதேசங்கள் பல ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு, கட்டிடங்களின் பற்றாக்குறை, மாணவர்கள் ஒழுங்கின்மை போன்ற பல காரணங்களினால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
ஆனால் உங்கள் பாடசாலையைப் பொறுத்த வரையில் பௌதீக வளங்கள் நிறைவாக காணப்படுகின்றன என்றே எண்ணுகின்றேன். கட்டடங்களுக்குக் குறைவில்லை, ஆசிரியர்கள் தட்டுப்பாடு இல்லை, ஆய்வு கூடங்கள், அரங்கங்கள் அனைத்தும் காணப்படுகின்றன.
எனவே இக் கல்லூரியை அனைத்து வசதிகளும் பொருந்திய ஒரு கல்லூரியாகவே கருதுகின்றேன். உங்கள் பாடசாலையின் எதிர்கால எதிர்பார்ப்புகள் பற்றி எனக்குச் சில குறிப்புக்கள் தரப்பட்டிருந்தன.
பாடசாலைக்குரிய சுற்று மதில் அமைக்கப்படல் வேண்டும், ஆசிரியர் தங்குமிட வசதி போன்ற தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வது பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவை தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சுக்களுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தி உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்படும். இது சம்பந்தமாகச் செலவழிக்க உங்கள் மாவட்ட மாகாண சபைப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று எதிர் பார்க்கின்றேன்.
அண்மையில் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த ஒருவரைச் சந்தித்த போது அவரின் பிள்ளைகளின் கல்வி நிலைமைகள் பற்றி விசாரித்தேன்.
அவர் மிகவும் பெருமையாகத் தனது மூத்த புதல்வி ஆங்கிலமொழி மூலமான பட்டப்படிப்பை மேற்கொள்வதாகவும் இந்த வருடம் இறுதி ஆண்டு எனவும், இரண்டாவது மகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் 1ம் வருடத்தில் இணைந்திருப்பதாகவுந் தெரிவித்தார்.
இருவரும் என்ன பாடநெறிகளைக் கற்கின்றார்கள் என வினவிய போது சற்று சலிப்புடன் அவர் தெரிவித்தார் “எங்கடை பிரதேசத்திலை Maths, Scienceபடிப்பிப்பதற்கு யாரும் இருந்தால் தானே? இரண்டு பேரும் Commerce தான்” எனக் கூறினார்.
இது மிகவும் கவலையைத் தரக் கூடிய ஒரு விடயம். இங்கிருக்கும் சகல பாடசாலைகளிலும் மாணவ மாணவியர்க்கு Maths, Scienceபடிக்கக் கூடிய வசதிகள் கிடைத்தால் அவர்களும் பொறியியலாளர்களாகவோ அல்லது வைத்திய நிபுணர்களாகவோ வர முடியும்.
எனவே அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட ஆவன செய்ய வேண்டும். பாடசாலைக் கல்விக் காலம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது ஐந்து வயது தொடக்கம் கா.பொ.த உயர்தரத்தை எட்டி நிற்கும் வரையான காலப்பகுதியாகும்.
இக் காலப்பகுதிக்குள் பல மாணவ மாணவியர்கள் வெவ்வேறு துறைகளில் கற்றுத் தேர்ந்து பல்கலைக் கழகங்களுக்குள் புகுந்து விடுகின்றார்கள்.
சிலர் கற்கின்ற காலங்களைத் தவறவிட்டுப் பின்னர் தமது கல்விக்காக அல்லது தாம் இழைத்த தவறுக்காக சதா காலமும் வருந்திக் கிடக்கின்றார்கள். “இளமையிற் கல்” என்ற ஒளவையார் வாக்குப் படி மாணவ மாணவியர் தமக்குக் கிடைக்கும் மாணவப் பருவம் என்ற இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.
இன்று பாடசாலை மாணவர்களிடையே துர்ப்பழக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி அம் மாணவர்களைக் கல்வியறிவில் மிகப் பின்தங்கியவர்களாக மாற்றுவதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது வடபகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும் அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டே பல சதிகள் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சதி என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என நீங்கள் எண்ணக்கூடும். மேலை நாடுகளில் போதைப்பொருட் பாவனையை மாணவர்களிடையே புகுத்துவதற்குச் சில மாணவர்களை இதற்கெனத் தேர்ந்தெடுத்து அவர்களைப் போதைப் பொருள் அடிமைகளாக மாற்றிய பின்னர்,
அவர்கள் மூலமாக ஏனைய மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையைப் பழக்குவதற்கு திட்டமிட்டு ஒவ்வொரு அடையாளப்படுத்தப்பட்ட அத்தகைய மாணவனையும்,
ஒவ்வோர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் புதுமுக மாணவர்களாகச் சேர்த்துக் கொண்டு அவர்கள் மூலமாக இந்தப் போதைப் பொருள் பாவனையை ஏனைய மாணவர்களுக்கு மிகவும் இலகுவாக பழக்குவதற்கு எத்தனிக்கின்றார்கள்.
இதே முறைமை எமது பகுதியிலும் பின்பற்றப்படுவதாக அண்மையில் கிடைக்கப்பெற்ற சில செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. வெளியில் இருந்து வந்து வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நபர்களே இதற்குப் பொறுப்பு என்று கூறப்படுகிறது.
போதைப் பொருள்ப் பாவனையானது புற்றுநோய் உடலில் பரவுவதற்கு ஒப்பானது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது மின்சாரச் சிகிற்சை மூலமாகவோ குணமடையச் செய்து விடலாம். ஆனால் நிலைமை முற்றி விட்டால் விளைவுகள் துன்பகரமானதாகவே அமையும்.
அதே போன்று தான் போதைப் பொருட் பழக்க வழக்கங்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் இப் பழக்கங்கள் திருத்தப்படலாம். இல்லை என்றால் அப் பழக்கத்தின் கோரப் பிடிக்குள் நின்று தப்ப முடியாது.
எனவே தான் நான் செல்கின்ற எல்லாப் பாடசாலைகளிலும் இச் செய்தியை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் திரும்பத்திரும்ப எடுத்துக் கூறி வருகின்றேன்.
உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனியுங்கள். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்ற போது அவர்களின் நடவடிக்கைகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் பிழையான வழிகளில் செல்வது கவனிக்கப்பட்டால் அதற்கான ஏற்ற பரிகாரங்கள் தேடப்படல் வேண்டும்.
இவ் விடயத்தை நான் இங்கு குறிப்பிடுவதற்கு மேலும் ஒரு காரணம் உள்ளது. உங்கள் கிராமத்திற்கு அண்மையாக காணக் கூடிய ஒரு கிராமத்தில் போதைப் பொருள் மொத்த விற்பனை நடைபெறுவதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டேன்.
எனவே தான் நீங்கள் இவ் விடயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதனை இங்கு குறிப்பிட்டேன். வர முன் காப்பதே சிறந்தது. போதைப் பொருட் பாவனை பிள்ளைகளிடையே பரவத் தொடங்கி விட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமும் செலவு மிக்கதாகவும் மாறிவிடும்.
அன்பார்ந்த மாணவர்களே!
இந்த முருங்கன் மகா வித்தியாலயம் ஏனைய பாடசாலைகளின் வளர்ச்சிக்கொப்பாக ஒரு 1ஏபி பாடசாலையாக இசுரு பாடசாலைத்திட்டத்தின் கீழ் விஞ்ஞான, விவசாய, மனைப்பொருளியல் ஆய்வு கூடங்களையும் அழகியற் கலைக் கூட வசதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.
1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் 1யுடீ ளுரிநச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டு உயிரியல் பொறியியல் ஆகிய இரு பாடத் துறைகளிலும் 40 மாணவ மாணவியர்கள் கற்கை நெறியை முடித்து இம் முறை பரீட்சைக்கு தோற்ற இருக்கின்றார்கள்.
எல்லா வளங்களையுங் கொண்ட இப் பாடசாலையில் தொழில்நுட்பப் பீடம் ஒன்றையும் இன்று திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
அடுத்த தடவை இப்பாடசாலைக்கு நான் விஜயம் செய்கின்ற போது இங்குள்ள மாணவ மாணவியர்கள் கா.பொ.த. உயர்தரத்தில் எல்லாத்துறைகளிலும் முன்னணி வகிக்கக் கூடிய மாணவ மாணவியர்களாகத் திகழ வேண்டும்.
அதற்காக இங்கே கல்வி கற்கும் எல்லா மாணவ மாணவியர்களும் அவர்களை வழி நடத்துகின்ற ஆசிரியர்களும் இடையறாது முன்நின்று உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
– tamilwin.com