மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள் விடுதலைக்காகப் போராடிவருகிறார்கள். அடக்கு முறைக்கும் அநீதிக்கும் எதிராக, பல்வேறு வடிவங்களில் யுகம் யுகமாக விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
உலகில் அநீதியும் அடக்குமுறையும் தொடரும்வரை விடுதலைப் போராட்டங்களும் தொடர்ந்தவண்ணம் தான் இருக்கின்றன.
ஒடுக்கப்படும் மானிட வர்க்கம் விடுதலையடையும் வரையில் ஏதோவொரு வகையில் போராடிக்கொண்டிருப்பது தான் மனித வரலாற்று யதார்த்தமாகவிருக்கின்றது.
தேசிய இனமாகவிருந்தும் உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும் நீதி நியாயத்திற்காகவும் தற்போதும் போராடிக்கொண்டிருக்கும் தமிழினமும் மேற்குறிப்பிட்ட யதார்த்தத்திற்கு விதிவிலக்கில்லை. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் துன்பியல் சம்பவம் நிகழ்ந்து ஆறரை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அறுபது ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் நிகழும், விடியல் பிறக்கும், நிம்மதியான வாழ்க்கை மலரும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு பொழுதுகளையும் கடந்து வந்துகொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதியும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவுடன் புதிய ஜனாதிபதி அரியாசனமேறினார். தொடர்ந்து பொதுத்தேர்தலும் நடைபெற்றது. அதிலும் மாற்றம் நிகழ்ந்தது.
வரலாற்றுத் திருப்புமுனையாக பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்தன. திக்கித் திணறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியானது. அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு நல்லெண்ணச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தற்போது 11 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆட்சி மாற்றத்தால் மாற்றம் நிகழ்ந்து விடுமென அதீத நம்பிக்கை கொண்டிருந்த தமிழினத்திற்காக எவ்வாறான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற வினா முன்வைக்கப்படுமாகவிருந்தால் ஒரே வார்த்தையில் எதுவுமேயில்லை என கூறிவிடக்கூடிய நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வாறிருக்கையில், ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னர், தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணைபெற்றவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர். ஆகவே, தமிழர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்யவேண்டிய பாரிய வகிபாகம் அவர்களிடத்திலேயே உள்ளது என்பதை மறுதலிக்க முடியாது. சர்வதேச சமூகம் எம்முடன் இருக்கின்றது. எமது விடயங்கள் சர்வதேச சமூகத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களின் துணையுடன் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நிரந்தர தீர்வுக்கான இலக்குகளை அடைந்து விடமுடியும். அதுநோக்கிய கருமங்களை இராஜதந்திரமாக முன்னெடுக்கவேண்டுமென ஆணித்தரமாகக் கூறிவருகின்றார்கள்.
மூன்று தசாப்த ஆயுதப்போராட்டத்தால் விலைமதிப்பற்ற இழப்புக்களை தமிழ் மக்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஆகவே மீண்டுமொருமுறை அத்தகைய இழப்புக்கள் ஏற்படுமாயின் அது மேலும் தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதாகவே அமையும். அந்த அடிப்படையில் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காக இராஜந்திரமான அணுகுமுறைகளை அல்லது நகர்வுகளைக் கையாளுகின்றோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவிருக்கின்றதில் தவறொன்றும் இல்லை. எனினும் சர்வதேசத்தின் துணையுடன் இராஜதந்திரமாக நகர்வுகளைச் செய்கின்றோம் அல்லது அணுகுமுறைகளை மேற்கொள்கின்றோம் என பகிரங்கமாகவே தெரிவிக்கப்பட்டு விட்டது.
அந்நிலையில் மலர்ந்திருக்கும் புதிய ஆட்சியில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழமைவுகளை சற்றே ஊடுருவி பார்க்கையில் இராஜதந்திரமான நகர்வுகளை, அணுகுமுறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பது அந்த வார்த்தைகளை கூறியவர்கள் அல்ல. மாறாக, பெரும்பான்மைவாத ஆட்சியாளர்களே என்பது கசப்பானதாக இருந்தாலும் தற்போதாவது ஏற்றுக்கொள்ளவேண்டித்தான் உள்ளது.
ஆம், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை 1948களில் சுதந்திரம் பெற்றிருந்தது. எனினும் பெரும்பான்மைவாத ஆட்சியாளர்கள் அவர்களிடத்திலிருந்த பிரித்தாளும் தந்திரத்தையும் முறையாக பயின்றிருந்தார்கள். உள்நாட்டில் சிங்கள–பௌத்த வாதத்தை விதைத்து இந்த நாட்டை சிங்கள–பௌத்த நாடாக கட்டியெழுப்புவதற்காக பிறிதொரு தேசிய இனமான தமிழினத்தை அடக்கியாளவேண்டுமென்ற திடசங்கற்பம் பெரும்பான்மைவாதிகளால் எடுக்கப்பட்டு விட்டது.
அதனை தீர்க்கதரிசனமாக உணர்ந்து தனது உரிமைகளுக்காகவும், அபிலாஷைகளுக்காகவும் போராட்டத்தை தமிழ்த் தேசிய இனம் ஆரம்பித்திருந்தது. அகிம்சை ரீதியாகவோ அல்லது ஆயுத ரீதியாகவோ போராட்டங்களின் வேட்கை வலுக்கும் போது பிரித்தாளும் தந்திரத்தை மிகச்செவ்வனே பயன்படுத்திவந்துள்ளார்கள் பெரும்பான்மைவாத ஆட்சியாளர்கள்.
ஆரம்பகாலத்தில் ஒப்பந்தங்களை செய்துகொண்டு சிறுநம்பிக்கையளிப்பதும் பின்னர் அவற்றை கிழித்தெறிவதுமாக இருந்த பெரும்பான்மைவாத ஆட்சியாளர்கள் 80களில் ஆயுதங்களுடன் எழுச்சி கொண்ட இளைஞர்களை குழுக்களாகப் பிரித்து, உள்ளக முரண்பாடுகளை வலுப்படுத்தியிருந்தனர். குறிப்பாக இதனால் சகோதரப்படுகொலைகளும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் நிலைமையும் நீடித்த வரலாறுகளே எம்மத்தியில் உள்ளன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் போராட்டங்களை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளும், நம்பிக்கையளித்து ஏமாற்றும் செயற்பாடுகளும் அதியுச்சத்தில் காணப்பட்டிருந்தது. அதன் பின்னரான காலத்தில் அவ்வாறான நிலைமைகள் சிறியளவில் குறைந்திருந்தன. மீண்டும் அவ்வாறான நிலைமைகள் 2001ஆம் ஆண்டளவில் வலுவடைந்தன. காரணம் மாமனாருக்கு ஒருபடி மேல்சென்று சிந்திக்குமளவிற்கு மருமகனான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணப்பட்டிருந்தார்.
பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க காலத்தில் சமாதான ஒப்பந்தம், ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆகிய நம்பிக்கையளிக்கும் வகையிலான விடயங்கள் அரங்கேறியிருந்தன. அதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிளவடைந்து சென்றார்.
அந்தப்பிளவுக்கு நானே முழுமையான காரணம். யுத்த வெற்றிக்கு புள்ளி வைத்ததும் நானே என பகிரங்கமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். அத்தகையவர் இன்று மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர தீர்வளிக்கும் ஒருதலைவராக நம்பிக்கையளிக்கும் அவதாரமாக காட்டி நிற்கின்றார். ஆனால் திரைமறைவில் பெரும்பான்மைவாத ஆட்சியாளர்கள் படிப்படியாக மேற்கொண்டு வரும் இராஜதந்திர காய்நகர்த்தல்கள் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரத்தை விஞ்சிவிட்டதோடு மட்டுமன்றி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நலிவடையச் செய்யும் நிலையிலேயே உள்ளது.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலிருந்து ஒரு இராணுவ வீரர் கூட அகற்றப்படமாட்டார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ யுத்தக்குற்றங்கள் தொடர்பாக இராணுவ வீரர்களை விசாரணை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச விசாரணையை நடத்த முடியாதென பகிரங்க அறிவிப்பை விடுத்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரியாசனத்தில் அமர்த்தியது. சர்வாதிகார ஆட்சியாளர்களை அரியாசனத்திலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒரேநோக்கத்திற்காக அந்த முடிவை எடுத்ததாகவும், மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக வாய்மொழியாக வழங்கிய உறுதிமொழிகளும் இவ்வாறான நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கான காரணங்களாக கூறப்பட்டன.
அதன் பின்னர் 2015 ஆகஸ்ட் 17இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாகப் பெற்றுக்கொள்வதற்கான முடிந்த முடிவு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது. வடக்கு, கிழக்கு இணைப்போ அல்லது சமஷ்டி, சுயநிர்ணயம் ஆகியவற்றை ஏற்கமுடியாதென ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏறக்குறைய ஒரேவகையிலான கருத்தை வெளிப்படுத்தியிருந்தன. கூட்டாக ஆட்சியமைத்தனர். வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையில் நிரந்தர தீர்வு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு கிடைத்த ஆணையுடன் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமர்ந்தது.
அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தப்போவதாகவும் குறிப்பிட்டது. சர்வதேச சமூகத்தினால் அரவணைக்கப்படும் நிலையில் புதிய ஆட்சியாளர்கள் இருக்கின்ற வேளையில், நல்லெண்ண சமிக்ஞையை கூட்டமைப்பு வெளிப்படுத்தி நிற்பதும்கூட ஒரு இராஜதந்திரமாக இருக்கலாம் எனக்கொள்ள முடியும். ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம் நீர்த்துப்போய்விட்டதென்றே கொள்ளவேண்டியிருக்கின்றது. அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிதலைவர் பதவி, பிரதம நீதியரசர் பதவி ஆகியவற்றை நல்லிணக்கத்தின் அடையாளங்களாக காட்டிய அரசாங்கம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. அதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டது. அதன் விளைவுதான் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் காரத்தின் செறிவு குறைக்கப்பட்டு அமெரிக்காவின் துணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மண்ணிலிருந்து யதார்த்தத்தை உணர்ந்து சர்வதேச விசாரணை வேண்டுமென கூறியவர்கள் அங்கு சென்று என்ன செய்தார்கள் என்பது யாருமறியாத நிலையில் உள்ளனர்.
அரசாங்கமே கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளுமளவிற்கு தீர்மானம் காணப்படுகின்றதென்றால் அதன் வலு எந்த நிலையில் இருக்கும் என்பதை அனைவருமே உணர்ந்துவிட்டனர். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்றுக்கொண்டு அதன்பால் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்கும் மிகப்பெரும் பிடியாகக் காணப்பட்ட மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான விடயங்கள் நீர்த்துப்போயுள்ளன. உண்மையிலேயே ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதென்பதும் இத்தகைய அதிமுக்கிய விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படவுள்ளதென்பதும் உலகறிந்த விடயம்.
ஆனால் இதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தவர்களில் ஒருதரப்பினர் அரசாங்கம். மற்றத்தரப்பினர் தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்.
அரசாங்கம் குறித்த விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பல சந்திப்புக்களை மேற்கொண்டு ஆராய்ந்திருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தேசியப் பட்டியல் தொடர்பான விடயத்திற்கே முக்கியத்துவம் வழங்கியிருந்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆகக் குறைந்தது பங்காளிக்கட்சிகளின் தலைவர்களாவது ஒன்று கூடி குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு முயற்சிக்கக்கூடவில்லை.
கூட்டத்தொடர் இடம்பெற்ற தருணத்தில் ஜெனீவாவில் ஆளுக்கொரு கருத்துக்களை வெளியிட்டு, தனித்தனியான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததன் மூலம் அதன் விளைவு தெளிவாகவே சகல தரப்பினராலும் உணரப்பட்டது.
அவ்வாறிருக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்குமான இடைவெளி, ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் வடக்குமுதல்வருக்குமான நெருக்கத்தை அதிகரித்துள்ளது. மேலும் வடக்கு முதல்வருக்கும் தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடு இன்று வீதிக்கு வந்து விட்ட நிலையில் அம்முரண்பாடு தமிழரசுக் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மற்றும், கூட்டமைப்பின் தலைவர் ஆகிய இருவருக்கும் பிரதமருக்குமிடையிலான நெருக்கத்தையும் அதிகரித்திருக்கின்றது. இதன்மூலம் இன்று தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் ஒரு பகுதி மீண்டும் பிரித்தாளும் தந்திரத்திற்குள் சிக்கிவிட்டது என்பது தெளிவாக வெளிப்படுகின்றது. இந்நிலையில் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து தீர்வுளை எவ்வாறு பெறமுடியும் என்ற கேள்வி எழுகின்றது.
அடுத்ததாக புதிய ஆட்சியாளர்களுக்கு நல்லெண்ண சமிக்ஞையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டிவருகின்றது. இதனால் கடந்த 10 மாதங்களில் எவ்வாறான நன்மைகள் பொதுமக்களுக்கு கிடைத்திருக்கின்றது? வடக்கு மாகாணத்தில் தலையிடியாகவிருந்த ஆளுநர் மாற்றப்பட்டார். பிரதம செயலாளர் மாற்றப்பட்டார் என எடுத்தவெடுப்பில் கூறினாலும் அவை தனியே வடக்கு மாகாணத்திற்கு மட்டும் இடம்பெறவில்லை. மாறாக இவ்வாறான மாற்றங்கள் புதிய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த அரசாங்க அதிபரை மாற்றும் கோரிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடத்தில் நேரடியாக முன்வைத்தும் வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இன்றுவரையில் அது கைகூடவில்லை. மிகச் சிறிய கோரிக்கையான அரசாங்க அதிபர் ஒருவரையே மாற்றமுடியாத நிலையே புதிய ஆட்சியில் காணப்படுகின்றது. இதற்கு ஒருபடிமேல் சென்று அரசாங்கத்தினால் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன எனக் கூறமுடியும். ஆனால் அந்த காணிகளை விடுவிக்கும் கோரிக்கை எப்போது முன்வைக்கப்பட்டது. யார் அதனை முன்னெடுத்தார்கள். விடுவிக்கும் அனுமதியை யார் வழங்கினார்கள் என ஆட்சியாளர்களும் தமிழ்மக்களுக்கான செயற்பாடென வர்ணிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளும் நன்கறிவார்கள்.
அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இன்று என்ன நடந்திருக்கின்றது. அரசாங்கத்தால் கூறப்பட்ட கால அவகாசங்கள் நிறைவடைந்து விட்டன. தற்போது டிசம்பர் 15ஆம் திகதிவரையில் பொறுத்திருந்து பார்ப்போமென கைதிகள் அவகாசம் அளித்திருக்கின்றார்கள். அதற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயம் சார்ந்து எவ்வாறான முடிவை எடுத்திருக்கின்றது? இவ்விடயம் தொடர்பான அணுகுமுறைகளைச் செய்வது தொடர்பில் கூட்டமைப்பினுள் கூடி ஆராயப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை. குறித்த காலம் வரையில் அரசாங்கம் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது விட்டால் அடுத்து கூட்டமைப்பு என்ன செய்யும் என்பது குறித்து கூட திட்டமிடல்கள் செய்யப்படவில்லை. கடந்த முறையே அதியுச்ச போராட்டமான ஹர்த்தாலை வடக்கு, கிழக்கில் பங்காளிக்கட்சிகளின் முன்முயற்சியால் மேற்கொண்டாகிவிட்டது. ஆனால் ஒரு நாள் வடகிழக்கு முடங்கியதை அரசாங்கம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தமிழர்களின் பிரதேசங்களில் இன்றும் புலனாய்வாளர்களின் நடமாட்டம், இராணுவத்தினரின் பிரசன்னங்கள், தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் உட்பட பலவிடயங்கள் மாற்றமின்றி தொடர்கதையாகவே இருக்கின்றது.
மறுபக்கத்தில் சர்வதேசரீதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருக்கின்ற நிலையில், இலங்கை விவகாரத்தை சர்வதேசம் தனது தலையில் தொடர்ந்தும் வைத்துக்கொள்ளுமா என்பது ஐயமே. அதேபோன்று புதிய ஆட்சியாளர்கள் சர்வதேச தரப்புக்களால் ஏற்கப்பட்டவர்களாகவும் நட்பு பாராட்டக்கூடியவர்களாகவும் உள்ள நிலையில் நாட்டு மக்கள்தொகையில் குறைவாக உள்ள தேசிய இனமான தமிழர்களுக்காக அவர்கள் எவ்வளவு தூரம் அரசாங்கத்திற்கு அழுத்தமளிப்பார்கள் என்பதும் மற்றொரு ஐயப்பாடாகவுள்ளது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் தமிழர்களுக்கான நீதி பெற்றுக்கொடுப்பதற்கான குரலாக, மீள்கட்டுமானத்திற்கான சக்தியாக திகழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களையும் அரசாங்கம் தற்போது தனது வலைக்குள் சிக்கவைத்திருக்கின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட தடைநீக்க அறிவித்தலால் அந்த நகர்வை செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றது.
இதனால் சில கருத்தியல் ரீதியான, அதிகார ரீதியான வேறுபாடுகளைக்கொண்டிருந்த புலம்பெயர் அமைப்புக்களுக்குள் தற்போது நிரந்தர விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி புலம் பெயர் அமைப்புக்களில் தடைநீக்கம் செய்யப்பட்டவை எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் நட்புறவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதேநேரம் தடைநீடிக்கப்பட்டுள்ள தரப்புக்கள் எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லது அமைதி காக்கலாம். இதனால் புலம் பெயர் நாடுகளில் தமிழர்களுக்கான குரல், செயற்பாடுகள் பலவீனமடையக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகின்றது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக தலைமையேற்று ஆட்சியில் அமர்ந்த காலங்களில் தமிழினம் எதிர்கொண்ட விடயங்களை விடவும் தற்போது இரு கட்சிகளின் ஆட்சியாளர்ளும் ஒன்றுபட்டு தமிழினத்திற்கு வழங்கப்போகின்ற விடயங்கள் பலமானதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்கான நிகழ்ச்சி நிரல் எப்போது தயாரிக்கப்பட்டதென்பதை அறிய முடியாது விட்டாலும் தற்போது அது செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இங்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று படுகிறது.
ஒரு கிராமத்தில் பிச்சைக்காரர் ஒருவர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்கிறார். அப்பொழுது அந்த வீட்டின் மருமகள் வாசல் அருகில் வந்து கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். அதைப்பார்த்திருந்த மாமியார் அந்த பிச்சைக்காரரை அழைத்து அவர் சொன்னதைக் கேட்காதே நான்தான் இந்த வீட்டின் தலைவி நான் சொல்கிறேன் உனக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். பின்னர் மாமியாருக்கும் மருமகளுக்கும் தகராறு முற்றி பின் சமசரம் ஏற்படுகிறது. அதே பிச்சைக்காரர் இப்பொழுது நமக்கு ஏதும் கிடைக்கலாம் என்ற ஆசையுடன் மீண்டும் வருகிறார். இப்பொழுது இரண்டுபேரும் ஒருமித்த குரலில், ஒன்றுமில்லை போய்வா என்று கூறுகின்றனர்.
தற்போது தமிழர்கள் நலன் சார்ந்த எந்தவிடயத்தையும் கருத்திலெடுத்து முன்னகர்த்துவதற்கான துளியளவிலான நிலைமைகளும் காணப்படவில்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி வகிபாகம் அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றி விட்டது. ஆகவே எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கான நல்லெண்ண சமிக்ஞையை விலக்குவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்தாலும் அதனை பொருட்டாக அரசாங்கம் கருதுமா என்பது கூட கேள்விக்குறிதான். காரணம். பெரும்பான்மைக்குள்ளேயே முன்னாள் ஜனதிபதியை அடியொற்றி எதிரணியொன்று உருவாக்கப்பட்டு விட்டது. ஆகவே அவ்வறிவிப்பு விடுக்கப்படுமாயின் பெரும்பான்மைவாதிகள் அந்த அணியினருக்கு எதிர்க்கட்சி வகிபாகத்தை வழங்குவார்கள் என்பது நிச்சயமாகின்றது. ஆகவே புதிய ஆட்சியாளர்களின் சதுரங்க காய்நகர்த்தல் தமிழ்த் தரப்பின் பக்குவமான இராஜதந்திர கருமங்களை கரையொதுக்கியுள்ளது என்பது வெளிப்படையாகின்றது.
தற்போதைய நிலையில் தமிழ்த் தரப்பின் இராஜதந்திர நகர்வுகள் என்பது பேரலையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஏற்றுக்கொண்ட துடுப்பற்று பயணிக்கும் கட்டுமரத்திற்கு இணையாகவே கருதவேண்டியுள்ளது. அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு கொள்கையளவிலான இணக்கப்பாட்டுடன் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்து எதிர்கால திட்டங்கள், வெளிவிவகார கொள்கைகள், பொது வேலைத்திட்டங்கள் உட்பட தமிழர்களின் பிரதிநிதிகளாகத் திகழ்வதற்கான மறுசீரமைப்புக்களை விரைந்து செய்வார்களா?
பெரும்பான்மை கட்சிகள் ஒரணியில் பயணிப்பது போன்று ஏனைய தமிழ்த் தரப்புக்களையும் ஆகக்குறைந்தது மக்கள் சார் பொது வேலைத்திட்டங்களுக்காக ஒன்றுபடுத்தி பயணிப்பது குறித்த நடவடிக்கைகளை விரைந்து எடுப்பார்களா?
இல்லையேல் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்யும் தருணங்களில் மட்டும் கூட்டாகச் சென்று சந்தித்து ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட வகையிலான கருத்துக்களைக் தெரிவித்துக்கொண்டு தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினைகள் முதல் அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றுத்தருமாறு யாசகம் கோரும் நிலைமையிலேயே தொடர்ந்தும் பயணித்துக்கொண்டு இருக்கப்போகின்றார்களா?
இனியும் இத்தகைய இராஜதந்திரம் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்படியே தமிழர் அரசியல் தொடர்ந்தால் மாற்று வழியென்ன?
திக்கற்று நாதியற்று நிற்கும் சமூகத்தின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?
மக்கள் மாற்றுத் தலைமை குறித்து விரிவாகவும் விரைவாகவும் யோசிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். அதற்கான நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது. தலைமை வேண்டுமென்றால் விவேகமாகவும், வெளிப்படையாகவும், உறுதியாகவும், ஜனநாயகப் பண்புகளை மதித்தும், கட்டமைப்புடனும் செயல்பட்டு மக்களின் அபிமானத்தைப் பெற முயலுங்கள். அல்லது ஒதுக்கப்படுவீர்கள்.
பிரம்மாஸ்திரன்
[email protected]