அமெரிக்காவில் அரசு மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், சக ஊழியரும், அவரது மனைவியும் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னாடினோ நகரில் “இன்லாண்டு ரீஜனல் சென்டர்’ தொண்டு அமைப்பின் சேவை மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்தில், சான் பெர்னாடினோ நகராட்சி மருத்துவத் துறை ஊழியர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்டவர்கள் அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சையது ஃபரூக் (28) என்ற ஊழியர், விருந்து முடியும் முன்னர் அந்த இடத்தை விட்டுச் சென்றதாகவும், புறப்படுவதற்கு முன்பு அவருக்கும், அங்கிருந்த சிலருக்கும் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து, தனது மனைவி தஷ்ஃபீன் மாலிக்குடன் (27) அந்த இடத்துக்கு சையது ஃபரூக் திரும்பி வந்தார். தானியங்கித் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அவர்கள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டுவிட்டு, காரில் தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
தப்பிச் சென்ற இருவரையும் போலீஸாரும், சிறப்பு காவல் படையினரும் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மடக்கிப் பிடித்தனர். அப்போது காருக்குள்ளிருந்தபடி சையது ஃபரூக்கும், தஷ்ஃபீன் மாலிக்கும் போலீஸாரை நோக்கிச் சுட்டனர்.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில், அந்தத் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் கூறினர்.
தாக்குதலில் ஈடுபட்ட சையது ஃபரூக் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் எனவும், தஷ்ஃபீன் மாலிக் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.
மிகுந்த மதப் பற்று கொண்ட சையது, அண்மையில் சவூதி அரேபியா சென்றதாகவும், அங்கு தஷ்ஃபீன் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு அவருடன் அமெரிக்கா திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-http://www.dinamani.com