ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வதற்கு எமது அரசு எடுத்துள்ள முடிவு எந்தவகையில் தவறாகும்?” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.
இந்த விடயத்தை எவரும் இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது என்றும், அரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் ‘தேசப்பற்று’ என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்குரிய வழிவகைகளை செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதற்குரிய சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
தேசிய பாதுகாப்பு, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் உரையாற்றுவதற்கு எதிர்பார்க்கின்றேன். போருக்கு அரசியல் தலைமை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சகல இராணுவத்தினருக்கும் பாராட்டுகளைக் கூறிக்கொள்கின்றேன்.
போர் முடிவடைந்து ஆறு வருடங்களாகின்றன. 2009 மே 19ஆம் திகதிமுதல் 2015 ஜனவரி 8ஆம் திகதிவரை போருக்குப் பின்னர் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. பௌதீக வாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்பட்டன. ஆனால், அபிவிருத்தியை மட்டும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்களை முன்னாள் அரசு புரிந்துகொள்ளவில்லை. மக்களிடையே சந்தேகம் நீக்கப்படவில்லை.
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு செயற்றிட்டம் வகுக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மக்கள் பெருவாரியாக எனக்கு வாக்களித்தனர். மட்டக்களப்பில் 81 சதவீதமும், வடக்கில் சகல மாவட்டங்களிலும் சராசரியாக 71 சதவீதம் வாக்குகளும் அளிக்கப்பட்டன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு ஆணை வழங்கப்பட்டது. இதன்படி நல்லிணக்க அமைச்சை நான் வைத்துள்ளேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக சகல தரப்புடனும் பேச்சு நடத்தவேண்டியுள்ளது. மஹிந்த அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில், சகல தரப்புடனும் கலந்துரையாடப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கியது பற்றியும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எட்டு மீதான தடை நீக்கப்பட்டமை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; புலிகள் அமைப்பு மீள தலைதூக்க இடமளிக்கப்படுகின்றது என்றெல்லாம் குறுகிற மனப்பான்மையுடன் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன; இனவாதம் பேசப்படுகின்றது.
இவ்வேளையில் இந்தியப் பிரதமர் நேரு கூறிய விடயமொன்று நினைவுக்கு வருகிறது. அதாவது, அரசியல் கபடதாரிகளின் இறுதி தஞ்சம தேசப்பற்றாகும் என்று அவர் கூறியிருந்தார். எனவே, இனவாத அரசியல் நடத்துபவர்களின் இன்றைய நிலை இதுதான். எங்களுக்கும் மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் வகையிலும், இனவாத கோணத்திலும் பேசத் தெரியும். ஆனால், அது நாட்டுக்கும், எமது எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல பெறுபேறுகளை வழங்கா. பாதக விளைவுகளையே ஏற்படுத்தும். இதைப் புரிந்து செயற்படவேண்டும்.
அதேவேளை, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. வடக்கு, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசின் கடப்படாகும். புலிகள் அமைப்பின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணாவுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் பிள்ளையானுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கே.பிக்கு அரசு ஆதரவு இருந்தது. இவை தவறு என்று நான் சொல்லவில்லை. எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும்போது ஏன் இனவாதம் பேசப்படுகின்றது. இவர்களை விடுதலைசெய்வதற்கு பிணை வழங்குவதற்கு அரசு எடுத்த முடிவு எப்படி தவறாகும்?
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவதானமாகவே இருக்கிறோம். அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். அரசு உளவுப்பிரிவு வழங்கிய அறிக்கைக்கமையவே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது” – என்றார்.
-http://www.tamilwin.com