போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: துருக்கியின் செயல் பெரும் தவறென்று வருந்த வைப்போம்; ரஷிய அதிபர் புதின் சூளுரை

ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி மாபெரும் தவறிழைத்துவிட்டதாக துருக்கி உணரும்படிச் செய்வோம் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்தார்.

ரஷிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வியாழக்கிழமை உரையாற்றியபோது இவ்வாறு அவர் கூறினார். அவர் தெரிவித்ததாவது:
பயங்கரவாதிகளுடன் துருக்கிக்கு உள்ள தொடர்பை யாரும் மறந்துவிடவில்லை.

சிரியாவில் பயங்கரவாதிகள் திருடி விற்கும் எண்ணெய் மூலம் தங்களது சட்டைப் பைக்குள் பணத்தை நிரப்பிக் கொள்பவர்கள் யார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

கூலிப் படையை உருவாக்கவும் ஆயுதம் வாங்கவும், ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இரக்கமற்ற பயங்கரவாதச் செயல்களை நடத்தத் திட்டமிடவும், அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவரது செயல்களிலேயே மிகவும் கீழ்த்தரமானது, துரோகம் புரிவதுதான்.

ரஷிய போர் விமானத்தின் விமானியைச் சுட்டு வீழ்த்தியவர்கள் அதை உணருவார்கள்.

நமது போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது மாபெரும் தவறு என்று துருக்கி உணரும்படிச் செய்வோம் என்று புதின் கூறினார்.

சிரியாவில் இஸ்லாமிய தேச பயங்கரவாத நிலைகளுக்கு எதிராக ரஷியாவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் எஸ்யு-24 ரக ரஷிய விமானமொன்று, துருக்கி வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அந்த விமானத்தை துருக்கி கடந்த நவ. 24-ஆம் தேதி சுட்டு வீழ்த்தியது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து விமானிகள் வெளியேறித் தப்பினர். அதில் ஒருவர் துருக்கி எல்லையில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.

போர் விமானம் தங்கள் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறியதாகப் பல முறை எச்சரிக்கப்பட்டதாக துருக்கி கூறியது.

ஆனால் ரஷிய போர் விமானத்தின் பாதை அமெரிக்க கூட்டுப் படையினருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதால், அத்துமீறல் நடைபெறவில்லை என்று ரஷியா கூறியது.

பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தச் சென்ற போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியிருப்பது, முதுகில் குத்தும் செயல் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

“துருக்கிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தச் செயல் மிக பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று புதின் எச்சரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, துருக்கிக்குப் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்வதையும், அந்நாட்டில் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளவும் தடை விதித்து அதிபர் புதின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தங்களது செய்கை மாபெரும் தவறைச் செய்துவிட்டோம் என துருக்கி உணரும்படிச் செய்வோம் என புதின் சூளுரைத்தார்.

-http://www.dinamani.com