ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் போர் முஸ்லீம்களுக்கு எதிரானதா?

isis1ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போரே தவிர, மேற்கத்திய நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான போர் அல்ல என்று நேட்டோ படை விளக்கம் தெரிவித்து உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வான்தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. பாரீஸில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 125-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வலுப்படுத்தப்பட்டது. பிரான்ஸ், ரஷியா விமானப்படைகள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனியும் கைகோர்த்து உள்ளது.

இந்த படைகளுக்கு உதவுவதற்காக தரைப்படையையும் அனுப்பி வைக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் சிரியாவுக்கு படைகள் அனுப்பும் திட்டம் எதுவும் தனது கூட்டணி நாடுகளிடம் இல்லை என நேட்டோ அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், சுவிஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ’ஐ.எஸ். ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ளூர் படைகளை பலப்படுத்துவதே ஒரே வழி. ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது’ என்றார்.

’ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போரே தவிர, மேற்கத்திய நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான போர் அல்ல. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே. அதைப்போல ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவோரில் பெரும்பாலானவர்களும் முஸ்லிம்கள் தான்.’ ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை ரஷியா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் கேட்டுக்கொண்டார்.

-http://www.athirvu.com