யானைத்தந்தத்தின் விலை சீனாவில் சரிபாதியாக சரிவு

elep1

 ஆப்ரிக்க யானைகளின் தந்தத்துக்கு சீனா பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது

சீனாவில் கடந்த ஒன்றரை ஆண்டில் பட்டைதீட்டப்படாத தந்தத்தின் விலை சரிபாதியாக சரிந்திருப்பதாக அந்த துறையின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன பொருளாதாரம் மந்தமடைவது, இந்த தந்த வர்த்தகத்தின் பாதிப்புகள் குறித்து சீனாவில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு மற்றும் சீனாவுக்குள் நடக்கும் தந்த வர்த்தகத்தை நிறுத்தவேண்டும் என்கிற சீன அரசின் நோக்கம் ஆகியமூன்றும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அளவுக்கு தந்தத்தின் விலை சரியவில்லை. மேலும் ஆப்ரிக்காவில் தந்தத்திற்காக கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை என்றும் இந்த ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

elep2

சீனாவில் யானைத்தந்தம் என்பது அந்தஸ்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது

ஆப்ரிக்க யானைகள் வேட்டையாடப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்பது யானை தந்தத்துக்கான சந்தையைக் குறைப்பது என்று யானை பாதுகாவலர்கள் தொடர்ந்து வாதாடி வந்துள்ளனர். குறிப்பாக சீனாவில் யானைத்தந்தம் என்பது சமூக மேல்மட்ட அந்தஸ்துக்கான குறியீடாக, அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட சீனாவில் யானைத்தந்தத்தின் விலை வீழ்ச்சியடைந்திருப்பது யானைப் பாதுகாவலர்களின் பிரச்சாரம் பயனளிக்கத்துவங்கியிருக்கிறது என்பதைக் காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் கடந்த ஆண்டு பட்டைத் தீட்டப்படாத யானைத்தந்தத்தின் விலை ஒரு கிலோ 2100 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து தற்போது 1100 அமெரிக்க டாலர் என்பதாக குறைந்திருக்கிறது.

elep3

ஆப்ரிக்க யானைத்தந்தம் சீனாவில் பட்டை தீட்டப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது

தற்போதைய இந்த ஆய்வு இரண்டு ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் இருவரும் யானைத்தந்தம் குறித்த ஆய்வை பல ஆண்டுகளாக செய்துவருகிறார்கள்.

சீன பொருளாதாரம் மந்தமடைவது யானைத்தந்தம் உள்ளிட்ட அடம்பரப்பொருட்களுக்கான சந்தையை கணிசமாக குறைத்திருப்பதற்கான ஆதாரத்தை தாங்கள் கண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் ஆப்ரிக்க யானைகள் கொல்லப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வும் கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயம் சேவ் த எலிபெண்ட்ஸ் என்கிற தன்னார்வ அமைப்பு இந்த ஆய்வறிக்கை நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும் ஆப்ரிக்க யானைகள் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போக்கு தொடருவதையும் இது கோடிட்டு காட்டுவதாக தெரிவித்திருக்கிறது.

elep4

சீனாவின் தந்த சந்தைக்காக ஆப்ரிக்க யானைகள் கொல்லப்படுவதாக பெரும் கவலை

சீனாவுக்குள் நடக்கும் தந்த வர்த்தகத்தை முழுமையாக தடை செய்யும் தனது வாக்குறுதியை சீன அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. -BBC