ஈராக்கின் ரெமடி பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக மக்களை கேடயமாக பயன்படுத்தும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் அல் அன்பர் மாகாணத்தில் ரெமடி நகரம் அமைந்துள்ளது. ஈராக்கின் முக்கிய வர்த்தக நகரமான இதை கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
இதையடுத்து ரெமடி நகரை மீட்பதற்காக ஈராக்கின் அரச படை மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் கடுமையாக போராடி வருகின்றன.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ரெமடிக்கு செல்லும் முக்கிய பாதையை அரச படையினர் கைப்பற்றினர்.
இதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சுற்று வளைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அரச படையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மக்களை வீட்டில் வசிக்கவிடாமல் தங்கள் இடங்களில் ஐ.எஸ். அமைப்பினர் தங்க வைத்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆட்சி பகுதியில் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மொபைல் போன் பயன்படுத்துபவர்களை பிடிப்பதற்காக அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருக்கும் அப்பாவி மக்களை வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் யாரும் வெளியேறக்கூடாது என்று தீவிரவாதிகள் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாராவது தப்பிக்க முயற்சித்தால் அவர்களது தலையை தீவிரவாதிகள் துண்டித்து விடுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சீக்கிரம் வெளியேற விரும்புகிறேன்.
எனினும் அதன் பின்னர் நடப்பவைகள் மிகவும் மோசமாக இருக்கும். எப்போதும் நாங்கள் தான் பலி ஆடு என்று கூறியுள்ளார்.
-http://world.lankasri.com