போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை! – அரசு உறுதி

channel-04இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அரசு அறிவித்தது.

அதேவேளை, இலங்கையின் ஆயுதப்படைகளைத் தரமுயர்த்துவதற்கு 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரிட்டன், இதனைக் கண்காணிக்க டில்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமித்துள்ளமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என பொது எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணி முன்வைத்துள்ள கருத்தையும் அரசு நிராகரித்தது.

இராணுவத்தை தரமுயர்த்துவதற்கு பிரிட்டனிடமிருந்து உதவி பெறுவது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலான விடயமல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரச நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

கேள்வி நேரத்தின்போது இலங்கை இராணுவத்துக்கு உதவி வழங்குவதற்குப் பிரிட்டன் முன்வந்துள்ளமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி வெளியிட்டுள்ள கருத்தை மையமாகக்கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தின் பயிற்சி உட்பட ஏனைய அபிவிருத்தி நடவடிக் கைக்காக வெளிநாட்டிடம் நிதியுதவி பெறும் நடவடிக்கை முன்பிலிருந்தே இடம்பெற்று வருகின்றது. எனினும், முன்னாள் அரசின் செயற்பாடுகளால் அவ்வாறான உதவிகள் தற்போது மீளக் கிடைக்கின்றன.

போர்க்காலத்தில் புலிகளின் கப்பல் தொடர்பில் அமெரிக்காவிடம் தகவல் பெறப்பட்டது. அப்போது நாட்டின் இறையாண்மை பற்றி எவரும் பேசவில்லை. தகவல் பெற்றது தவறும் கிடையாது. இதுபோன்றுதான் பிரிட்டனிடம் உதவிபெறுவதும் தவறில்லை.

அதேவேளை, பலவந்தமாகக் காணாமல்போகச் செய்யப்ப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. செயற்குழுவினரை திருமலை கடற்படை முகாமுக்குள் அனுமதித்த விடயத்தில் தவறு ஒன்றும் இல்லை. அவர்களை அனுமதித்திருக்காவிட்டால், அங்கு சித்திரவதை முகாம் இருக்கின்றது என அவர்கள் உலகுக்குத் தகவல் வழங்கியிருப்பார்கள்.

இலங்கை ஐ.நா. அமைப்பில் அங்கம் வகிக்கின்றது. ஐ.நா. அமைப்பு என்பது நாம்தான். ஆகவே, இதில் தவறு எதுவும் கிடையாது. அமெரிக்க குழுவை இந்த முகாமுக்கள் அனுமதித்திருந்தால் அதை தவறு என்று குறிப்பிடலாம்” – என்றார்.

அத்துடன், கொழும்பில் பாரிய தாக்குதல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித,

புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை தலைவராக இருந்த நகுலேஸ்வரனை முன்னாள் அரசு விடுதலை செய்தது. புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி விடுவிக்கப்பட்டார். புலிகள் அமைப்புக்கு முழு ஆயுதங்களையும் வழங்கிய கே.பியை விடுத்து அவருக்கு மஹிந்த தரப்பினர் விருந்தளித்தனர்.

பிரபாகரனைவிட கே.பிதான் தண்டிக்கப்பட வேண்டியவர். இவர்களை விடுவித்தவர்கள்தான் இன்று இப்படிப் பேசுகின்றனர். அதுபற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

அதேவேளை, பிரபல ரகர் வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சாட்சியங்கள் இருக்கும் சி.டி.டி.வி. கமராவில் காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும். இந்த விடயத்தை மூடிமறைக்கவேண்டிய தேவை முன்பிருந்தவர்களுக்கு இருக்கின்றது.

அத்துடன், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனைக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியவற்றை மையப்படுத்தியே உள்ளக விசாரணை இடம்பெறும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: