தமிழ்மக்கள் அனைத்தையும் கெஞ்சித்தான் பெறவேண்டும் என்ற மனோநிலையில் ஆட்சியாளர்கள்!- வடக்கு முதல்வர்

vigneswaranஇலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டு நல்லாட்சி, ஜனநாயக ஆட்சி என விதந்துரைக்கப்படும் நிலையிலும் தமிழ் மக்கள் தங்களிடம் அனைத்து விடயங்களையும் கெஞ்சித்தான் பெற்றுக் கொள்ளவேண்டும். என்ற மனோநிலை இந்த ஆட்சியாளர்களிடமும் மாற்றம் பெறாமல் இருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 40ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இதன் போது வடக்கின் 5 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி குறித்த கூட்டங்கள், கலந்துரையாடல்களில் மாகாணசபை புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மத்திய அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் நிதியை தாங்களே பெற்றுக் கொண்டு தான்தோன்றித்தனமாக தொடர்ந்தும் செயற்படுவதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்களிடம் கருத்துக்களையோ, பங்களிப்பையோ கேட்பதில்லை. குறிப்பாக தற்போது ஜெய்க்கா நிறுவனம் எமது மாகாணத்திற்குட்பட்ட குளங்களை ஒன்றிணைக்கும் செயற்றிட்டம் தொடர்பாக பேசியிருக்கின்றது.

இதில் நாங்கள் அந்த நிறுவனத்திடம் கேட்டிருக்கின்றோம். குளங்களை இணைப்பது சரி ஆனால் அதனை முகாமை செய்வது யார்? என இது எதற்காக என்றால் மகாவலி கங்கை வடக்கிற்கு ஒரு துளி நீரையும் கொடுக்கவில்லை.

ஆனால் மகாவலி திட்டத்தினால் தொடர்ந்தும் குடியேற்றங்கள் தாரளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான பல விடயங்கள் நடக்கின்றது.

மேலும் முன்னர் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் எம்மோடு இணைத்தலைவர்களாக செயற்பட்டவர்கள் யார் என்றால் அந்தஸ்த்தில் எமக்கு சமமான அமைச்சர்கள் ஆனால் இப்போது நியமிக்கப்படுபவர்கள் அவ்வாறில்லை.

எனவே இந்த நியமனங்களும் பிழையானவை, என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை முதலமைச்சரை, மாகாணசபையை எதிர்காலத்தில் புறக்கணித்து நடக்கும் கூட்டங்களுக்கு கூட்டம் நடைபெறும் இடங்களுக்குள் சென்று குழப்பம் விளைவிப்போம். என மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: