தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! உறவினர்கள் சாட்சியம்

Son missingதமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அவர்கள் காணாமல் போகவில்லை.

…படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என உறவுகள் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

மேற்படி ஆணைக்குழுவின் 4ம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சாட்சியத்தில் சோ.சிவஞானசுந்தரம் என்பவர் தனது மகன் சி.ஜனார்த்தனன் (நரேன்- வயது37) 2009.05.18ம் திகதி முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார். இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாதர் ஜோசப் பிறான்சிஸ் தலைமையில் படையினரிடம் சரணடைந்து கொண்டிருந்தார்கள். இதன்போது எனது மகனும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என படையினர் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாகவே மகனை நாங்கள் படையினரிடம் ஒப்படைத்தோம். ஒப்படைத்த பின்னர் படையினர் மகனை பேருந்தில் கொண்டு
சென்றார்கள். பின்னர் தகவல்கள் எவையுமில்லை. எனது மகன் 1989ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் சுய விருப்பின் பெயரில் இணைந்து கொண்டு கடற்புலிகள் பிரிவில் தளபதியாக இருந்தார் என தனது சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறை பிரிவில் தளபதியாக இருந்த மாதவன் என்பவரின் மனைவி இன்பரூபினி சிவசிதம்பரம் கணவன் சிவசிதம்பரம் (வயது45) 20 வருடங்களாக தமிழீழ
விடுதலைப் புலிகளின் காவல்துறையில் அங்க த்துவம் பெற்றிருந்தார். அவர் பின்னர் காவல்துறையினரின் பொறுப்பாளராக இருந்த நடேசனுக்கு கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2009.05.18ம் திகதி போர் நிறைவடைந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வட்டுவாகல் பகுதியில் வைத்து படையினரிடம் சரணடைந்தார். நாங்கள் எங்கள் கைகளால் கொண்டு சென்று ஒப்படைத்தோம். அவர்கள் காணாமல்போகவில்லை. பாதர் ஜோசப் பிறான்சிஸ் தலமையில் புலிகளின் முக்கிய தளபதிகளுடன் எனது கணவனும் ஒப்படைக்கப்பட்டு படையினரால் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டார். அதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். சரணடைந்தால் பொதுமன்னிப்பு என எமக்கு உறுதியளிக்கப்பட்டது. அதற்கமையவே நாங்கள் ஒப்படைத்தோம். எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும் என குறிப்பிட்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: