தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி?

sampanthan_vicneswaran_001பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள், பரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில், தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின், பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic trap) தமிழரசு கட்;சி, கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து விட்டதா என்னும் கேள்வி தொடர்பில் பதில் தேடவேண்டிய நிர்பந்தம் ஒன்றை, அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

அண்மைக்காலமாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பான சர்ச்சைகளும், வாதப்பிரதிவாதங்களும் ஓயாமல் தொடர்கிறது. இந்த விவாதங்கள் அனைத்துக்கும் பிள்ளையார் சுழியிட்ட சுமந்திரனோ, இப்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை ஆனால், விவாதங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. எரிகிற நெருப்பில் மேலும் எண்ணை ஊற்றுவது போல், சற்று அணைந்து கிடந்த நெருப்பை மீண்டும் சம்பந்தன் ஊதிவிட்டிருக்கின்றார்.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முதன்முதலாக சம்பந்தன் வெளிப்படையாக ஒரு விடயத்தை கூறியிருக்கிறார். அதவாது, சிலசமயம் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஆட்சியிலுள்ள வேறு சில நபர்களோ, எங்கள் மத்தியில் சிறு சிறு விடயம் சம்பந்தமாக வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக, அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது.

அண்மைக்கால அரசியல் விவாதங்களில் ரணிலின் நிகழ்சி நிரலோடு சம்பந்தன் ஒத்துப் போகிறார் என்றவாறான ஒரு விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது, இப்படியான பின்புலத்தில் தான் தற்போது சம்பந்தனிடமிருந்து இவ்வாறானதொரு கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே அப்படி பலியாகிவிடக் கூடாதென்னும் எண்ணம் சம்பந்தனுக்கு இருந்திருக்குமானால், விக்னேஸ்வரன் விவகாரம் இந்தளவிற்கு சிக்கல் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்காது.

ரணில் விக்ரமசிங்கவிற்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை தோன்றிய போதே, அதில் சம்பந்தன் தலையிட்டு நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், இன்று எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை தெற்கின் சக்திகள் கையாளக் கூடுமென்னும், ஆருடம் கூறவேண்டிய நிலைமை உருவாக்கியிருக்காது.

இது ஒரு வழமையான தமிழ் பல்லவி. இந்தப் பல்லவி கடந்த காலங்களில், பல நல்ல சக்திகளை ஓரங்கட்டுவதில் பெரிய பங்காற்றியிருக்கிறது.

அண்மைக்காலமாக வெளித்தெரியும் உட்பிரச்சினைகளை கையாளுவதற்கான, ஒரு உபாயமாகவே, சம்பந்தன், மேற்படி கருத்தை முன்வைத்திருக்கின்றார். சம்பந்தன் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும் என்பது இப்பத்தியாளரின் கணிப்பு.

ஒன்று, சம்பந்தன், விக்னேஸ்வரன் தொடர்பில் மக்கள் கவனம் அதிகரித்திருப்பதால், ஒரு வேளை, விக்னேஸ்வரனுடன் ஒரு சில அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முற்பட்டால், அது தனக்கு சவாலான மாற்று குரலாக அமைந்துவிடலாம் என்றும் சம்பந்தன் எண்ணலாம்.

இரண்டு, அவ்வாறானதொரு அணி உருவாகுமானால், அதனை பலவீனப்படுத்தும் ஆற்றலும் தன்னிடம் உண்டு என்பதையும் சம்பந்தன், மறைமுகமாக உணர்த்த விளைந்திருக்கின்றார். இதற்கு வழமையான தமிழ் அணுகுமுறையில் பதிலிறுக்க முடியுமென்றும் சம்பந்தன் நம்புகிறார்.

அதாவது, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பலவீனப்படுத்துவதற்கே இவ்வாறான முயற்சி பயன்படும். எனவே, இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவோர், சிங்கள ஆட்சியாளர்களுக்கே நன்மை செய்ய விளைகின்றனர். இது ஒரு தமிழ் வாய்ப்பாட்டு வகையான இராஜதந்திரம். ஆனால் உண்மையில் சம்பந்தன் இதனை வேறு விதமாக அணுகியிருக்க வேண்டும்.

ஆனால் பழுத்த அரசியல் அனுபவமுள்ள ஒரு (அவரது விசுவாசிகள் சிலரால், அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும்) சம்பந்தன் தவறான ஒரு கணிப்பில் பயணிக்கின்றார். உண்மையில் சம்பந்தன் இதனை தலைகீழாக சிந்தித்திருக்க வேண்டும். விக்னேஸ்வரன் சில விடயங்களை கடுமையாக அழுத்தி பேசுகின்ற போது, அதனை பின்தளமாகக் கொண்டு, எவ்வாறு தெற்கினை iகையாள முடியும்?

தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை உறுதியாக முன்வைப்பதற்கும், பேரம் பேசல் அரசியலை திறம்பட கையாளுவதற்குமான ஒரு காரணியாக, விக்னேஸ்வரனின் நிலைப்பாடுகளை, எவ்வாறு பயன்படுத்தலாம் என்றுதான் சம்பந்தன் சிந்தித்திருக்க வேண்டும் ஆனால், சம்பந்தனோ விக்னேஸ்வரனின் உடும்புப்பிடியான அணுகுமுறைகளை, தெற்கு தனக்கு சாதமாக பயன்படுத்திவிடும் என்று தலைகீழ் விளக்கமளிக்க முற்படுகின்றார்.

மேலும் விக்னேஸ்வரனை ஒரு எதிரி போன்று அணுகவும் முற்படுகின்றார். இந்த இடத்தில் சம்பந்தன் ஒரு அரசியல் தந்திரோபாயவாதியாக (Political strategist) செயற்படவில்லை மாறாக, ஒரு சாதாரண அரசியல் வாதியாகவே வெளித்தெரிகின்றார்.

சம்பந்தன் விக்னேஸ்வரனை தந்திரோபாய அரசியலுக்கான ஒரு கருவியாக நோக்காமல், மாறாக, தலைமைத்துவதத்திற்கு சண்டை போடும் ஒருவராக காண்பிக்க முற்படுகின்றார். இங்கும்; சம்பந்தன் அறிந்தோ அறியாமலோ தெற்கின் சக்திகளுக்கே வாய்ப்பை வழங்குகின்றார். சம்பந்தன், இந்த விடயங்களை வழமையான அணுகுமுறைகளின் ஊடாக, திசைதிருப்பலாம் என்னும் நம்பிக்கையிலேயே கவனம் கொண்டிருப்பதாக தெரிகிறது.

சம்;பந்தன் தனது உரையில் குறிப்பிடும் போது, வலிந்து, ஒரு விடயத்தை அழுத்தியிருக்கின்றார். அதவாது, விக்னேஸ்வரன் விரும்பினால் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். அது அவரது உரிமை. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம், விடயங்களை வெறும் பதவிப் போட்டியாகவே சம்பந்தன் காண்பிக்க விளைகின்றார்.

இதன் வாயிலாக விக்னேஸ்வரனை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்த முடியுமென்பதே சம்பந்தன் போடும் கணக்கு, ஆனால், இதிலுள்ள முரண்நகையான விடயம், விக்னேஸ்வரன் இதுவரை கட்சியின் தலைமை பற்றி எங்கும் பேசவில்லை, மேலும், விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக, குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் இருக்கின்றார்கள் என்றும் சம்பந்தன் அழுத்தி குறிப்பிட்டிருக்கின்றார்.

இதன் மூலம் ஒரு விடயம் வெள்ளிடைமலை, அதவாது, விக்னேஸ்வரனை தனிமைப்படுத்தும் யுத்தத்தை சம்பந்தன் தொடங்கிவிட்டார் என்பதையே, மேற்படி, அவரது வாதங்கள் உணர்த்துகின்றன. ஆனால் பழுத்த அரசியல் தலைவர், சம்பந்தன் ஒன்றை அறியவில்லை போலும், சூழ்நிலைமைகள் மாறுகின்ற போது, கும்பைத் தொட்டியில் கிடப்பது கோபுரங்களுக்கும் செல்வதுமுண்டு, அதே போன்று, கோபுரங்களில் கிடப்பது குப்பைத் தொட்டிக்கு வருவதுமுண்டு.

தமிழரசு கட்சி தலைமைக்கு வந்தது போன்று. அனைத்தையும் குறிப்பான சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன.

இந்தப் பத்தி சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகளை முற்றிலுமாக எழுந்தமானமாக நிராகரிக்கவுமில்லை. அவ்வாறான அணகுமுறையில் அவர்கள் பயணிக்கும் அதேவேளை, விக்னேஸ்வரன் மற்றும் அவரது நிலைப்பாட்டுடன் பயணிக்க விரும்பும் ஒரு தரப்பும் இன்னொரு கோணத்தில் இயங்கட்டும். இவ்வாறு பயணிக்கும் போது ஒன்று, மன்றொன்றை, அடித்தளமாகக் கொண்டு முன்நகர முடியும்.

இதனையே இப்பத்தி தந்திரோபாய அணுகுமுறை (Strategic approach) என்கின்றது. அவ்வாறில்லாது, அதிகாரங்களை கைப்பற்றியவர்கள் அதன் பிரயோகம் தொடர்பில் தங்களுக்குள் முரண்படுவது போன்று, கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் முரண்படுவார்களாயின் அது, எப்போதும் தெற்கிற்கு மட்டுமே சாதகமாக அமையும்.

இதற்காக தெற்கை குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. அது அவர்களின் வல்லமை. இதனை சொல்வதற்கு சாணக்கியர்கள் தேவையில்லை, சாமான்யர்களே போதும், ஏனெனில் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது சிறு பையனுக்கு கூடத் தெரிந்த விடயம்.

அண்மையில் ஒரு மூத்த அரசியல் தலைவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் கூறிய விடயம் கவனத்தை ஈர்த்தது. எங்களுடைய அரசியல் சண்டைகளை பார்த்தால், தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் அரசியல் ரீதியாக மோதிக் கொள்வது போன்றே தெரிகிறது.

ஆனால், நாங்களோ அப்படியான மோதல்களில் ஈடுபடக் கூடிய தகுதியுடைவர்கள் அல்ல. தமிழ் மக்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், இப்படியான மோதல்களில் ஈடுபட்டால், அது மக்களுக்கு நன்மையானதாக இருக்கும், ஆனால் இங்கு நடப்பதோ வேறு

பிரித்தாளும் தந்திரோபாயம் என்பது அதிகாரத்தை குவிக்க முற்படுவோரின் ஒரு அணுகுமுறை. இதனை ஆட்சியாளர்கள் எப்போதுமே கையாண்டு கொண்டுதான் இருப்பர். இதில் ஆச்சரியப்படவோ, தடுமாறவோ எதுவுமில்லை. ஆனால் நிலைமைகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப அரசியலில் ஈடுபடுவது ஒன்றே, அதிகாரத்தை கோரி நிற்கும் மக்களின் பக்கமாக நிற்போரின் பணி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதை இப்பத்தி எந்தளவு வலியுறுத்தி நிற்கிறதோ அதே அளவிற்கு கூட்டமைப்பை, அதன், கொள்கை மற்றும் செயற்பாடுகள் சார்ந்து பலப்படுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தி நிற்கிறது.

இதில் தமிழரசு கட்சி ஒரு வழியில் பயணிக்க முடியுமனால், அதனை நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. அது அவர்களின் தந்திரோபாயமாக இருக்கட்டும். அதே போன்று கூட்டமைப்பும் ஒரு நிலைப்பாட்டில் பயணிக்கட்டும்.

உதாரணமாக தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது, அல்லது, அதற்கு மேலும் சில விடயங்களை வெற்றிகொள்ள முடியுமானால், அதனை அவர்கள் செய்யட்டும். அடுத்த பக்கத்தில் இருக்கின்ற கூட்டமைப்பு, அதனையும் தாண்டிய அரசியல் தீர்வு ஒன்றிற்காக குரல் கொடுக்கட்டும்.

இவ்வாறான அணுகுமுறைகளின் ஊடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதற்கான சூழல், உயிர்ப்பாக இருக்கின்ற அதே வேளை, அரசியல் போராட்டமும், தொடர்பறாத வகையில் நகர முடியும். இதுவே அதிகாரத்தை கோரி நிற்கின்ற இனச் சமூகங்கள் கையாள வேண்டிய தந்திரோபாய அணுகுமுறையாகும்.

யதீந்திரா  – [email protected]

-http://www.tamilwin.com

TAGS: