நியூசிலாந்து நாட்டின் தற்போதைய தேசிய கொடியை நீக்கிவிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வடிவம் ஒன்றிற்கு அந்நாட்டு மக்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து நாட்டின் தற்போதைய தேசிய கொடியானது அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய கொடி போல் காணப்படுவதால், இதனை நீக்கிவிட்டு புதிதாக தேசிய கொடியை உருவாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
வெளிநாட்டு மக்களுக்கும் இருநாடுகளின் தேசிய கொடிகள் குறித்து குழப்பம் ஏற்பட்டு வந்ததாலும், தற்போது நியூசிலாந்து அரசு இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் காட்டி வருகிறது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று 5 புதிய வடிவங்களால் ஆன கொடிகளில் எதனை தெரிவு செய்யலாம் என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் சுமார் 15 லட்சம் பேர் வாக்களித்தனர். முடிவில், Kyle Lockwood என்ற கலைஞர் வடிவமைத்த இரண்டு கொடிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
கருப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்கள் மற்றும் 4 நட்சத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள அந்த கொடியை தெரிவு செய்ய பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர்.
பொதுமக்கள் தெரிவு செய்துள்ள இந்த கொடியையே தேசிய கொடியாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எனினும், இறுதியான முடிவு எடுப்பது தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அப்போது இறுதியான தேசிய கொடியின் வடிவம் உறுதிப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
-http://world.lankasri.com