மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ஸ்பெயின் நாட்டு பிரதமரின் முகத்தில் குத்து விட்ட இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் கலீசியன் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் அந்த நாட்டின் பிரதமர் மரியானோ ரஜாய் கலந்து கொள்ள வந்திருந்தார்.
அப்போது 17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் தமக்கு பிரதமருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகளுடன் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இளைஞனை உரிய சோதனைக்கு பின்னர் அனுமதித்த பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்று பிரதமருடன் புகைப்படமும் எடுத்துள்ளான்.
ஆனால் திடீரென்று எவரும் சுதாரித்து தடுக்கும் முன்னர் அந்த இளைஞர் தமது இடது கையை முறுக்கி பிரதமர் ரஜாய் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளான்.
இதில் நிலை குலைந்த பிரதமர் ரஜாயின் கண்ணாடி தெறித்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் பொலிசாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளான்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பிரதமர் ரஜாய், இந்த தாக்குதலில் நிலைகுலைந்துள்ளார் என்றாலும் காயம் ஏதுமின்றி தப்பியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டதன் காரணம் உடனடியாக தெரியவில்லை என்றபோதும் பிரதமரை தாக்கிய அந்த இளைஞன் இனவாத கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டவர் என கருதப்படுகிறது.
-http://world.lankasri.com