பாலச்சந்திரனுடன் நின்ற எனது மகன் எங்கே?; ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தந்தை சாட்சியம்!

balachandran“இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் எனது மகன் இருந்தார்.

பாலச்சந்திரனையும், எனது மகனையும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினர் கைது செய்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அமர்வுகளின் ஒரு பகுதி நேற்று புதன்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அங்கு, சாட்சியமளிக்கும் போதே இறுதி மோதல்களின் போது காணாமற்போன ஐங்கரனின் தந்தை மார்க்கண்டு அருளானந்தம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தன்னுடைய சாட்சியத்தில் “எனது மகன் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, கேணல் கடாபியின் அனைத்துலக தொடர்பாடல் பிரிவில் இருந்தார். 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது வீட்டுக்கு இராணுவச் சீருடையுடன் வந்திருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்தவர்கள், என்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டி என் மீது தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, தாங்கள் சிறைச்சாலையில் வந்து தஞ்சமடையவேண்டும் என்று அவர்கள் எனக்குக் கூறினர். சிறையில் இருப்பது எனக்கு விருப்பமின்மையால், நாங்கள் குடும்பமாக தலைமறைவாக வாழத் தொடங்கினோம்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது எனது மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைது செய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர்.

ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் இளைஞர்கள் சிலரின் உடலங்களும் அருகில் இருந்தன. எனினும், அவற்றில் எனது மகன் இருப்பானோ என்று பார்த்தேன். அதில் எனது மகனைக் காணவில்லை. எனது மகன் எங்கே? அவனை மீட்டுத் தாருங்கள்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: