இலங்கை சமாதானத்தை நோக்கிய நீண்ட பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது: தோமஸ் ஷனோன்

thomas-shenonஇலங்கை சமாதானத்தை நோக்கிய கடினமான நீண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு மக்களுக்கு பலம் உள்ளது என்பதற்கு இலங்கை சிறந்த எடுத்துக் காட்டாகும். இலங்கை தனது அனுபவங்கள் ஊடாக உலகின் ஏனைய நாடுகளுக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கவேண்டும். அமெரிக்கா வலுவான இலங்கையை எதிர்பார்க்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தோமஸ் ஷனோன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஜனவரியிலும், ஓகஸ்டிலும் கடந்த காலங்களின் எரிச்சலூட்டும் தன்மையிலிருந்து விலகி அனைவரையும் உள்வாங்கும் சமாதான, நீதியான, ஜனநாயக மற்றும் வளம்மிக்க எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான உங்கள் (இலங்கையரின்) உறுதிப்பாட்டை உலகம் பார்த்தது.

ஜனநாயகத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு மக்களுக்குச் சக்தியுள்ளது என்பதற்கான உதாரணம் இலங்கையாகும். தங்கள் தேசத்தின் போக்கை வாக்குப்பெட்டிகள் மூலம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு மக்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

நாங்கள் தற்போது இலங்கை, ஏனையவர்களுக்கும் புத்துணர்வை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எப்படி மிகவும் கடினமான எதிர்காலத்தைக் கடப்பதற்கும், ஸ்திரமான, வளமிக்க, எதிர்காலத்தை உருவாக்கவும், நாட்டின் பாதுகாப்பு, வளம், கௌரவம் என்பவற்றைப் பலப்படுத்தவும் நீதியும், கருணையும் உதவமுடியும் என்பதையும் இலங்கை காண்பிக்கமுடியும். அமெரிக்கா வலுவான இலங்கையை காணவிரும்புகின்றது.

சர்வதேச சமூகத்திற்குத் தலைவராகவும், சர்வதேச பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும், மனித உரிமைகள் மற்றும் நீதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாக்கும், சர்வதே சட்டங்களை பின்பற்ற உதவும் இலங்கையை காண விளைகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமெரிக்கா உறுதியாக ஆதரிக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகயுள்ளோம்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: