இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும், தேர்தல் முறையையும் ஏற்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே, பகைமை அரசியலை கைவிடுவோம்” என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழனன்று இடம்பெற்ற தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் உட்பட ஒன்பது அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றிய பயங்கரமான நிலைமையை நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளுமே ஏற்படுத்தின. இந்த இரண்டு கட்சிகளின் பகைமை, அரசியல் அதிகார ஆசையே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்தது. எனவே இனிமேலும் எம்மி்டையே பகைமை அரசியல் வேண்டாம். அதனை கைவிடுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்போமென்று கூறியுள்ளார். இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் மிகவும் யதார்த்தபூர்வமாக தெரிவித்துள்ள கருத்துக்களை சகல அரசியல் தலைமைத்துவங்களும் கவனத்தில் கொள்வது அத்தியாவசியமாகும். இனவாத, மதவாத சிந்தனைகள் இருக்கும் வரையில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வையோ, ஐக்கியத்தையோ ஏற்படுத்த முடியாத நிலைமைகளே தொடரும். அதுமாத்திரமன்றி, அரசாங்கத்தினாலும் காத்திரமான, யதார்த்தபூர்வமான தீர்மானங்களை எடுக்க முடியாது போகும்.
அந்தவகையில் புதிய அரசாங்கமும் தனது கொள்கைகள், திட்டங்களை சீரான நிலையில் முன்னெடுக்க முடியாத ஒருவித தளம்பல் நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது. இதனிடையே அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவிக்கும் வகையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் அண்மைய வரவு – செலவுத் திட்டத்தில் சில புதிய நடைமுறைகளை அறிவித்துவிட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பையடுத்து அரசாங்கம் அவற்றை வாபஸ் பெற்றுக்கொண்டது.
குறிப்பாக, புதிதாக அரச சேவையில் சேர்த்துக் கொள்ளும் ஊழியர்களுக்கு அவர்களது நிதிப் பங்களிப்பின் பேரில் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை 2016 ஜனவரி மாதம் முதல் அறிமுகம் செய்வதென வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வாகன புகை பரிசோதனை கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது பாதியாகக் குறைக்கப்பட்டது.
இவ்வாறாக அரசாங்கம் மக்களின் அதிருப்தியை அடுத்து தனது திட்டங்கள், கொள்கைகளை திடீர் திடீரென மாற்றியமைக்கும் போக்கை கடைப்பிடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் அரசாங்கம் சில விடயங்களில் பலவீனமான தன்மையை கொண்டிருப்பதாகவே பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு வகையில் வலுவான கூட்டாட்சியை நடத்துவதற்குத் தேவையான பலத்தை அரசாங்கம் கொண்டிருந்த போதிலும் கடும் போக்காளர்களின் எதிர்ப்புக்கள், அவர்கள் மக்களை தூண்டிவிடும் போக்குகள் காரணமாக அரசு ஒருவித அச்ச உணர்வுடன் செயற்படுவதாகக் கருத வேண்டியுள்ளது.
இவை மாத்திரமன்றி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் மற்றும் உயர் பாதுகாப்பு வலய விடுவிப்பு போன்றவற்றில் கூட அரசாங்கம் ஓர் நிலையான தீர்மானத்தை எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததை காணமுடிந்தது. இறுதியாக அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களுக்கு பிணை வழங்கும் விவகாரத்தில் அரச அதிகாரிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் இழுத்தடித்து வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையைத் தோற்றுவித்திருந்தன.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் உருவான எதிர்ப்புக்கள் அந்த நிலைமையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது என்றே கூறலாம்.
இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவாரா? என்ற கேள்வியும் எழவே செய்கின்றது. தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெறும்வகையில் அவர்களுக்காகப் பரிந்து பேசி பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து விடக்கூடாது என்பதில் அரசியல் தலைவர்கள் மிகவும் கரிசனை கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் அவர்கள் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளில் துணிந்து ஈடுபடுவார்களா என்பது அடுத்து எழும் கேள்வியாகும்.
குறிப்பாக, தமிழ் மக்களின் புரையோடிப் போன தேசிய இனப்பிரச்சினைக்கு இந்த நல்லாட்சியில் தீர்வு கிட்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆட்சியில் விடிவு கிட்டாது போனால் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிட்டாது என்ற வகையிலேயே அவர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அடுத்த வருட இறுதிக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
எவ்வாறெனினும், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இனவாத, மதவாத கருத்துக்கள் தீவிரமாக முன்வைக்கப்படுவதன் காரணமாகவும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் சக்திகளின் நடவடிக்கைகள் வலுவடைந்து வருவதன் நிமித்தமும் அரசு எந்தவொரு நடவடிக்கையையும் துணிந்து மேற்கொள்ள முடியாத தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.
இந்த விதமான போக்குகள் காரணமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் வெற்றியளிக்குமா என்பது அடுத்து எழும் பிரதான கேள்வியாகும். எவ்வாறெனினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல்வேறு அமைச்சர்களும் தெரிவித்து வரும் கருத்துக்கள் ஆரோக்கியமளிப்பதாக உள்ளன.
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கருத்து வெளியிடுகையில், முன்னைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை புறக்கணித்த நிலையில் நாம் அவர்களை ஆதரித்து செயற்படுவதே இனவாதிகளுக்கு முக்கிய பிரச்சினையாகத் தெரிகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களை விடவும் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் நாம் தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
எவ்வாறு இருந்த போதிலும் அரசாங்கம் பலவீனமானதோர் போக்கை கொண்டிருக்குமானால் அதன்மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணமுடியாது என்ற நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும். குறைந்த பட்சம் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து, நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் நீடித்த அமைதியையும் ஏற்படுத்துவதற்கேனும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் அரசின் கரத்தை பலப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-http://www.tamilwin.com