சவுதி அரேபிய அரசிற்கு எதிராக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த Abdullah al-Zaher என்ற 15 வயது சிறுவன் கடந்த 2012ம் ஆண்டு அரசிற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட உடனே அவனை எந்த கருத்தும் கூறவிடாமல் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014ம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அரசிற்கு எதிராக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பானது சில மாதங்களுக்கு முன்னர் 2015ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 19 வயதாகும் அந்த நபருக்கு எதிர்வரும் சில தினங்களில் எப்போது வேண்டுமானாலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து நபரின் தந்தையான Hassan al-Zaher என்பவர், ‘எனது மகன் அரசிற்கு எதிராக செயல்படவில்லை. உண்மையில் அது அரசிற்கு எதிரான ஊர்வலம் என்பது கூட தெரியாமல் எனது மகன் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டான்.
இப்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள தனது மகனை காப்பாற்றுங்கள்’ என மனித உரிமைகள் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.
மரண தண்டனைக்கு எதிரான Maya Foa என்பவர் பேசியபோது, சிறுவன் கைது செய்யப்பட்டபோது, அவனை பல சித்ரவதைகளுக்கு உட்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
சவுதி அரேபியா அரசுடன் கூட்டணியில் உள்ள அமெரிக்கா, பிரித்தானிய அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபிய வரலாற்றிலேயே 15 வயதில் கைது செய்யப்பட்ட ஒரு சிறுவனிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com