ஆள் சேர்க்க ஐ.எஸ். புது முயற்சி: முறியடிப்போம் என ஆப்கான் அரசு சூளுரை

jihadi_radio_isis_001ஆப்கானிஸ்தானில் தங்கள் கொள்கைகளை பரப்பும் பொருட்டு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைக்கொண்டிருக்கும் புது முயற்சியை முறியடிக்க அரசு சூளுரைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு புதிய முயற்சியை கைக்கொண்டுள்ளனர்.

புதிதாய் வானொலி சேவை ஒன்றை துவங்கியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்குள்ள தாலிபான்களுக்கு இணையாக தங்கள் இயக்கத்திலும் ஆள் சேர்க்க முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ஐ.எஸ்.தலைமையின் ஒரு மணி நேரம் நீண்ட வானொலி உரையில் இஸ்லாமிய இயக்கத்தில் இணைவதின் நோக்கம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தாலிபான் இயக்கத்தில் இருக்கும் தீவிரவாதிகளையும் தங்கள் இயக்கத்தில் இணைந்து போரிடும்படியும் அழைப்பு விடுத்துள்ளார்.

அச்சின் மாகாண ஆளுநர் ஹாஜி கலிப், ஐ.எஸ். ஆதரவு குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும், புதிதாய் துவங்கப்பட்டுள்ள வானொலி சேவை இந்த ஆதரவினை அதிகரிக்கச் செய்யும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

வானொலி சேவை வாயிலாக இளைஞர்களை அவர்களால் எளிதில் மூளைச்சலவை செய்ய முடியும் என தெரிவித்துள்ள அவர், அரசு தீவிரமாக செயல்பட்டு அவர்களின் இந்த முயற்சியை முறியடிக்க ஆவன செய்யும் என்றார்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் ஆப்கானிஸ்தான் ராணுவம் முற்றிலும் தோல்வி கண்டு வரும் இந்த நிலையில், அந்த அமைப்பின் வானொலி சேவையை முடக்க கடின முயற்சி தேவைப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com