தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி புதிய அரசியலமைப்பு அவசியமா? என்ற கோள்வியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார்
அக்கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1970ம் ஆண்டு நான் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய பின்பு பல ஆண்டுகள் நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இணைந்து கடமையாற்றியாற்றிமையால் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
1960ம் ஆண்டு கிளிநொச்சி தொகுதியில் முதல் தடவையாக நான் போட்டியிட்ட போதிலும், இலங்கை சுதந்திரமடைந்த 1948ம் ஆண்டு தொடக்கம் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவனாக இருந்து வருகிறேன். நமது நாட்டின் மீது எனக்குள்ள பற்று வேறு எவரிலும் பார்க்க எந்தவிதத்திலும் குறைந்ததல்ல.
நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருப்பதோடு கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராகவும் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அகிம்சையை பாரம்பரியமாக கொண்ட கண்ணியமிக்க பெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது.
பாராளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி எதிர்கட்சி தலைவர் பதவியையும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தூரதிஷ்டவசமாக இந்த நாட்களில் நீங்கள் எதுவித ஆலோசனைகள் வழங்குவதிலேயோ அல்லது பெறுவதிலேயோ அக்கறைகொள்ளவில்லை.
வரலாறு காணாத வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 2004ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைய செய்யப்பட்டிருந்தும் எனது நாட்டுக்கு என்னால் இயன்றளவு கடமையை செய்ய தவறமாட்டேன். இந்த சந்தர்ப்பத்துக்கு பொருந்தாத எந்த விடயத்தையும் குறிப்பிட்டு உங்களை மனசங்கடத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை.
இக்கடிதத்தை தங்களுக்கு எழுதும் நோக்கம் தங்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிய பல விடயங்கள் பற்றி கவனத்தில் கொண்டு வருவதற்காகவே.
தற்போதைய பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணயசபையாக மாற்றி புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க நடவடிக்கையெடுக்க உள்ளதாக வந்த செய்தியே இவ்வாறு எழுதத் தூண்டியது.
இச்செயல் குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்ததற்கு ஒப்பானதாகும்.
1970ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் ஆட்சியில் மக்கள் வழங்கிய ஆணைக்கமைய அன்றைய பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணயசபையாக செயற்பட்டு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அமுல்படுத்தவும் செய்தது.
எனது அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டு கூறுவதானால் இந்த புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சி எதுவித பயனையும் தரப்போவதில்லை என்பதை துணிந்து கூறுவேன்.
1970ம் ஆண்டு நாங்கள் பாராளுமன்றத்தில் இப்பணியில் ஈடுபட்டிருந்தவேளை இதற்கு இரண்டு ஆண்டுகாலம் பிடித்ததோடு பல உபகுழுக்கள் பல கூட்டங்களை நடாத்தி அரசியல் சாசனத்தை உருவாக்கியது.
இன்றைய சூழ்நிலையில் மிக அக்கறையுடன் உங்களிடம் நான் கேட்பது உங்களுடைய எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள்முன் வைக்கப்படும் ஆலோசனைகள் அத்தனையும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் சம்பந்தபட்ட பிரச்சனைகளுக்கு ஆதரவு வழங்குவார்களா? அனைவரும் அறிந்த விடயம் யாதெனில் காணி, பொலிஸ் அதிகாரம் போன்ற பிரச்சனைக்குரிய அதிகாரப்பகிர்வு ஆலோசனைகளுக்கு ஏகமனதான ஆதரவு கிடைப்பது முடியாத காரியமாகும்.
உதாரணமாக ஒரு சிறு விடயமாகிய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் பல பிரிவுகளிலும் இருந்து பெருமளவில் எதிர்ப்புக்கள் வந்தன.
அதேநேரம் அவர்களை விடுதலை செய்யுமாறு திரும்பத்திரும்ப சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனங்கள் அனுப்பிவைத்த பெருமளவிலான கோரிக்கைகளை நிராகரிக்க முடியுமா?; கிராம ராஜ்ய அமுல் மூலம் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்காதீர்கள் என இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.
தயவுசெய்து இப்பிரச்சனையை தற்போதுள்ள அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதைவிடுத்து மாற்றியமைக்க முயற்சிக்காதீர்கள்.
ஓர் உதாரணமாக எடுப்பின் இந்திய அரசியல் சாசனத்தில் பெருமளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அச்சாசனத்தையே முற்றாக மாற்ற அவர்கள் முயற்சிக்கவில்லை.
நாம் உருவாக்கும் எமது அரசியல் சாசனத்தைக்கூட எதிர்காலத்தில் மாற்றமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?. எமது தேவைக்கேற்ப எத்தகைய மாற்றத்தை எந்தெந்த சரத்துக்களில் மேற்கொள்ள வேண்டுமென்பதை அறிந்துகொண்டு காலத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் வீண் பிரச்சனைகளை வருந்தி அழைக்காமல் இலகுவாக மாற்றங்களை தற்போதுள்ள சாசனத்தில் மேற்கொள்ள முடியும்.
நீங்கள் எதைச் செய்தாலும் சிறுபான்மையினருடைய அபிலாசைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்திய ஆட்சி முறையை நாமும் பின்பற்றி எமது பிரச்சனைகளுக்கு ஏன் தீர்வு காணமுடியாது என்று கூறுவது இந்தச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருந்த நீங்கள் இந்திய ஆட்சி முறையை நாம் பின்பற்றுவதை ஆதரித்து தொலைக்காட்சியில் பேட்டியும் வழங்கியமை எனக்கு ஞாபகமிருக்கிறது.
இன்றைய நிலைமையில் எத்தனை உறுப்பினர்கள் உங்களுடைய ஆலோசனைக்கு ஆதரவு தருவார்கள் என்று தெரியாத நிலையில் புதியவொரு அரசியல் சாசனத்தை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி படுதோல்வியில் முடியும் என்று முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகின்றேன்.
அத்துடன் பிரச்சனை சமாதானமாக தீர்க்க முடியுமென்று முழு நம்பிக்கையோடு இருக்கின்ற சிறுபான்மை மக்களுக்கு இத்தகைய தோல்வி பெரும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும் என்பது உறுதி.
இன்றைய சூழ்நிலையை அனுசரித்து அரசியல் சாசனத்தை மாற்றும் ஆலோசனையை கைவிட்டு தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் பொருத்தமான மாற்றங்களை செய்து பிரச்சனையை தீர்க்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரேயொரு மாற்றாக நீங்கள் விரும்பினால் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் காரணம் தெரியாமல் அமுல்படுத்தப்படாமல் விடப்பட்டதுமான “நிபுணர்கள் குழு”வின் சிபாரிசை பற்றி ஆலோசிக்கலாம்.
திரு. சம்பந்தன் அவர்கள் இந்திய முறையிலான ஆட்சியமைப்பை ஆதரிப்பவர் என்பதை நானறிவேன். ஆகவே அவர் தனது குழுவினரை சம்மதிக்க வைத்து மேலதிகமாக தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள “உரிமைகள் சட்டத்தை” ஒத்த சரத்தை மேலதிகமாக சேர்ப்பதோடு அதைமீறுவோருக்கு கடும் தண்டனையுடன் கூடிய அம்சத்தையும் இணைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
எனது இந்த ஆலோசனை பலரால் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எண்ணத்துடன் ஒத்துப்போகும் என தான் நம்புவதாக வீ.ஆனந்தசங்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com