வடக்கு முதல்வர் – அமைச்சர்கள் இடையே கருத்து முரண்பாடுகள்!

vigneswaran_vadamaradchi_001வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என அறியமுடிகின்றது.

யாழ். மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்பு மீது அதிருப்தியடைந்தவர்களுமே குறித்த அமைப்பில் ஒன்றிணைந்துள்ளனர் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பேரவையில் இணைவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த சனிக்கிழமைக்கு முன்னதாகவே தனது ஏனைய 4 அமைச்சர்களுடனும் கலந்துரையாடல் நடத்தியதாக அறியமுடிகின்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது 4 அமைச்சர்களுமே, முதலமைச்சர் குறித்த பேரவைக் கலந்துரையாடலில் பங்கெடுக்கக்கூடாது என்று ஒருமித்துக் குறிப்பிட்டுள்ளனர்.

அதனையும் மீறி முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடலில் பங்கெடுத்தமையும், அதன் இணைத் தலைமையை ஏற்றமையும் அமைச்சர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை, வடக்கு மாகாண அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

-http://www.tamilwin.com

TAGS: