சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசியல் அமைப்பு திருத்தம் செய்யக் கூடாது!– ஜீ.எல்.பீரிஸ்

Sri Lankan Foreign Minister G.L. Peirisசர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசியல் அமைப்பு திருத்தம் செய்யக் கூடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி அபாயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கருத்துக்களை அறியாது அரசியல் அமைப்பு பேரவை ஒன்றின் ஊடாக அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்தால் அது மக்களின் ஆணையை நிராகரிப்பதாகவே அமையும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் அரசியல் அமைப்பு பேரவையை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் ஊடாக அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய சில வழிமுறைகள் காணப்படுகின்றன.

அரசியல் அமைப்பின் 83ம் சரத்தில் இது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்ட காரணத்தினால் மட்டும் அரசியல் அமைப்பினை திருத்திவிட முடியாது.

அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இந்த அரசாங்கம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்தல், புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்தல் போன்ற கவர்ச்சியான வசனங்களைப் பேசி ஏனைய அனைத்து விடயங்கள் உள்ளிட்ட வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்ய முயற்சிக்கின்றது.

தற்போதைய அரசியல் அமைப்பின் இரண்டாம் சரத்தில் ஐக்கிய இலங்கை மற்றும் ஒன்பதாம் சரத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் ஆகியன புதிய அரசியல் அமைப்பில் மாற்றப்பட்டால் அது பாரதூரமான நிலைமையாகவே கருதப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பில் 250 சரத்துக்கள் காணப்பட்டால் அவை அனைத்தையும் ஒரே யோசனையில் மாற்றிவிட முடியாது.

மக்கள் மத்தியில் தெளிவான பிரச்சினை காணப்படுகின்றது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: