நியாயமான அரசியல் தீர்வு விடயத்தில் ஏளனப்போக்கு வேண்டாம்!

maithiri_ranil_001நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரமானது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையிலான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதற்கு சுதந்திரத்தின் பின்னர் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நியாயமான தீர்வு என்பதனை காண முடியவில்லை.

எமது நாட்டின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அரசியல் தீர்வு செயற்பாட்டில் பல தீர்வுத்திட்ட முறைமைகள் குறித்து பல்வேறு வடிவங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளன. ஆனால் எந்தவிதமான முயற்சியும் வெற்றியை நோக்கி நகரவில்லை.

குறிப்பாக சமஷ்டி முறைமை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு, இடைக்கால தன்னாட்சி நிர்வாக அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு முறைமைகள் குறித்து கடந்த காலங்களில் பேசப்பட்டன.

ஒரு கட்டத்தில் 1987ம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் அதற்கேற்றவாறு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறைவடையப் போகின்ற நிலையில் அதில் காணப்படுகின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை மாகாணங்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்வாறு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது தொடர்ந்தும் எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையிலேயே தற்போது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

புதிய கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் அரசியல் நகர்வுகளும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள தீர்வுத்திட்டம் எந்தவகையில் மற்றும் எவ்வாறான முறைமையில் அமையப் போகின்றது என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

எவ்வாறான தீர்வுத் திட்டம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தினால் தற்போது கிராம இராஜ்ஜியம் என்ற விடயம் முன்வைக்கப்பட்டு வருவதுடன் அது குறித்து பேசப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த கிராம இராஜ்ஜிய விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசிம் விளக்கமும் அளித்திருக்கின்றார்.

அதாவது கிராம இராஜ்ஜியத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்துவம் பேணப்படும். இதனால் வடமாகாண சபைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் கிராம ராஜ்ஜியத் திட்டம் தொடர்பில் வீணான அச்சம் கொண்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் முழுமையாக அறியவில்லை. எனவே, இத்திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராம இராஜ்ஜியங்கள் மூலம் 2500 குழுக்கள் ஏற்படுத்தப்படும். இந்த குழுக்களில் பிரதேச சபை, மாகாண சபைகள் உட்பட அனைத்து கிராம மட்டத்திலான வளங்களும் உள்ளீர்க்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அவர்கள் ஊடாக அனைவரது இணக்கப்பாட்டிற்கும் அமைய கிராமங்களின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

இவ்வாறு அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் இந்த கிராம இராஜ்ஜியம் விடயம் தொடர்பில் விளக்கத்தை முன்வைத்திருந்தாலும் தமிழ் மக்கள் இந்த விடயத்தில் உடனடியாக திருப்தியடையும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறிவிட்டு இறுதியில் இந்த கிராம இராஜ்ஜிய எண்ணக்கருவையே அரசியல் தீர்வுத் திட்டமாக கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் முன்வைத்து விடுமோ என்ற அச்சம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறான பல்வேறு தீர்வுத் திட்ட முறைமைகள் குறித்து கடந்த காலங்களில் பேசப்பட்டது.

விசேடமாக 2000ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்ட பொதி ஒரு முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதும் கூட அந்த முயற்சி இறுதியில் வெற்றியடையாமல் போனது.

அதன் பின்னர் 2003ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்பிற்குமிடையில் ஒஸ்லோவில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வுத் திட்டமாக கொண்டு வரப்படலாம் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இது ஒரு திருப்புமுனை வாய்ந்த விடயமாக அப்போது காணப்பட்டது. ஆனால், அந்த முயற்சியும், துரதிஷ்டவசமான முறையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இவ்வாறு வரலாறு முழுவதும் தீர்வை அடைவதற்கான முயற்சிகள் இறுதிக் கட்டம் வரையில் வந்தாலும், இறுதியில் தோல்வியில் முடிவடைந்த துரதிஷ்டவசமான பதிவுகளையே நாம் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கருத்தொருமைவாத தேசிய அரசாங்கமானது இந்த தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இதயசுத்தியுடன் செயற்பட்டு ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் கடந்தகால அனுபவங்களை பாடமாகக் கொண்டு ஒரு புதிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக அரசாங்கம் ஏற்கனவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வகட்சி மாநாட்டு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

இந்த சர்வகட்சி மாநாட்டின் ஊடாக சகல அரசியல் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியமாகும்.

அத்துடன் அரசாங்கமானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஆக்கபூர்வமான அணுகுமுறை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதனை விடுத்து அரசாங்கமானது தீர்வை வழங்குவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத தீர்வுத் திட்டங்களை பலவந்தமாக திணிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறு தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவின்றி கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையானது இதுவரைக்கும் வெற்றியடையாத நிலைமையிலேயே காணப்படுகின்றது.

எனவே, அனைத்து இன மக்களினதும் ஆதரவுடனும் புரிந்துணர்வுடனும் ஒரு நியாயமான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புரிந்து அரசாங்கம் நடந்து கொள்ளும் என நம்புகிறோம்.

கடந்த காலம் முழுவதுமாக அரசியல் தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் இதன் பின்னரான தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலான தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான வேலைத்திட்டங்களை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறோம்.

-http://www.tamilwin.com

TAGS: