வடக்கில் மையம் கொள்ளும் மைத்திரி….!

maithiri_vikki_001இது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

இலங்கையில் தமிழர்களின் இருண்ட காலம் என்று வர்ணிக்ககூடிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் தை மாதம் 8ம் திகதியோடு ஓராண்டை பூர்த்தி செய்யும் நாள் நெருங்குகின்றது. அதாவது இதை பின்வரும் நிலைகளில் விளக்கலாம்.

ஒன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த காலம், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை தமிழர்கள் தங்கள் விருப்பு வாக்குகள் மூலம் தகர்த்தெறிந்த காலம், தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ச மீது கொண்ட கோபத் தீயை ஒற்றை விரல் நுனி கொண்டு மாற்றிய காலம், இலங்கையில் சீனா செல்வாக்கு இழந்த காலம்,

மைத்திரிபால சிறிசேன ஆட்சி ஏற்ற காலம், ரணில் மீண்டும் இராஜதந்திர நகர்விற்குள் உள்நுழைந்த காலம், இதற்கு மேல் அமெரிக்க, இந்திய அரசுகளின் விருப்பு அல்லது கைப்பொம்மை அரசு ஒன்று இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறிய காலம், மகிந்த தரப்பிற்கு தலையிடியாய் மாறிய காலம் என்று இன்னோரன்னமாக வகைப்படுத்தலாம்.

ஆனால் இந்த மாற்றங்கள், மாறுதல்கள் தமிழ் மக்களுக்கு ஏதேனும் அரசியல் ரீதியில் நன்மை பயக்கவில்லை என்பதை இப்பொழுது பல தரப்பினரும் சுட்டிக்காட்ட விளைகின்றனர் என்பது ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் அரசியல் இருப்பிற்கும், தமிழ் இனத்தின் அடையாளங்களும் இழக்கச் செய்யப்படுமோ எனும் அச்சம் மேலோங்குகின்றது.

தமிழர்களின் பூர்வீக தாயக நிலம் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிளை கிழக்கில் இருந்து இராணுவ நடவடிக்கை மூலமாக வெளியேற்றிய அரசாங்கம் அங்கு தனக்கு விசுவாசமான கிழக்கு மாகாண அரசொன்றை தோற்றிவித்தது.

அதற்கு முன்னரே கிழக்கு மாகாணம் எங்கும் சிங்களக் குடியேற்றங்கள் நாளுக்கு நாள் பல்கிப்பெருகிக் கொண்டிருந்தது.

ஆனாலும், கிழக்கில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கு மாகாணம் இலங்கை அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் திட்டத்தில் மேலும் வலுவடைந்தது. அங்கு இப்பொழுது சிறுபான்மை மக்களின் குறை தீர்க்கும் அரசு இல்லை.

அதனால் கிழக்கு நோக்கிய பார்வை தற்பொழுது உள்ள அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை. அது பற்றி இன்றைய மைத்திரி ரணில் அரசு கவலை கொள்ளவும் இல்லை.

ஆனால் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் எழுச்சி பெற்ற மைத்திரி அரசின் கவலை ஒன்று மட்டுமே. அது வட மாகாணத்தை எவ்வாறேனும் சமாதானப்படுத்த வேண்டும், அல்லது வட மாகாண மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதாகும். இதில் மைத்திரியின் பார்வை சரியானதாக அமைகின்றது போலவே தோன்றுகின்றது.

காலாகாலமாக இலங்கையை ஆண்ட சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கை ஒரு எதிரி நாடாகவே பார்த்தனர். அவர்கள் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல தவறினர். அடக்கினால் வெற்றி பெறலாம் என்று நினைத்தனர்.

அது ஜே.ஆர் ஆக இருக்கட்டும், சந்திரிக்கா அம்மையாராக இருக்கட்டும், மகிந்த ராஜபக்சவாக இருக்கட்டும் ஆட்சிப் பீடம் ஏறிய அத்தனை பேருமே வடக்கை அடக்குமுறைக்குள்ளேயே வைத்திருந்தனர்.

ஆனால் அமெரிக்காவின் மைத்திரி அந்தக் கணக்கில் இருந்து, அந்தப் பாதையில் இருந்து விலகி நடக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்கவின் மூளையின் உபாயத்தில் இருந்து செயற்படுகின்றார். ஏனெனில் மகிந்த ராஜபக்சவின் போர் வெற்றிக்கு வித்திவிட்டவர் ரணில் விக்ரமசிங்க என்பது தெரிந்த ஒன்று.

அப்படிப்பட்ட ரணிலின் மென்மையான நகர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி சிந்தித்தாக வேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வென்று, அவர்களிடம் நற்பெயர் பெற்றாலே எதிர்கால சிங்கள இராணுவ வீரர்களின் தூக்குக் கயிறுகளை கீழ் இறக்க முடியும் என்பது அமெரிக்காவின் கணக்கு. இதுதப்புக்கணக்கு அல்ல சரியான இலக்கு.

போர்க்குற்றம் பற்றிப் பேசிய அமெரிக்கா இப்பொழுது அது பற்றி வாய் திறக்காமல் அமைதி அடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழ் மக்களையும் அமைதியடைச் செய்ய வேண்டுமாயின் நாட்டின் தலைவர் நல்லவர் எனும் நிலையினை தமிழ் மக்களின் மனங்களில் விதைத்தாக வேண்டிய கட்டாய சூழல் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள், எதிர்ப்புக்களை காட்டிலும், வட மாகாணத்தில் இருந்து எழும் எதிர்ப்பே அதிகம். வடக்கு மாகாணத்திற்கு அஞ்சி ஆட்சி செலுத்தியவர்கள் தான் இதுவரை காலம் அரச கட்டிலில் ஏறியவர்கள்.

அந்நிலை மாற்றப்பட வேண்டும். அது நிகழ்ந்தால் அமெரிக்கா தான் நினைத்ததை செய்யும், இந்தியாவின் கனவு பலிக்கும்.

அந்த நகர்வுகள் மெல்ல மெல்ல நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மகிந்தவை வீழ்த்தியவுடன் வடக்குத் தமிழர்கள; கொஞ்சம் விட்டுக்கொடுப்பார்கள், புதிய அரசோடு நெருங்கி வருவார்கள் என்று அமெரிக்கா நினைத்திருக்க, அதற்கு பெரும் தடையாக, தலையிடியாக எதிர்பாராமல் வடக்க முதல்வர் விக்கினேஸ்வரன் மாறினார். ரணிலுக்கும் அவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டது.

ரணிலின் நரித்தந்திரத்தை புரிந்து கொண்டதாலோ என்னமோ முதல்வர் விக்கினேஸ்வரன் விட்டுக்கொடுப்பு அரசியலுக்குத் தயார் இல்லாமல் இறுமாப்போடு செயற்பட்டார். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும், அதன் ஒரு சில உறுப்பினர்களும் ரணில் மைத்திரி அரசோடு நெருங்கிப் பழகினர்.

இது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. யாரை நம்புவது. விட்டுக்கொடுக்காமல் விடுதலைப் புலிகளைப் போல கொள்கையில் விடாப்பிடியாக நிற்கும் வடக்கு முதல்வரையா? அல்லது மென்மையான போக்கை கடைப்பிடித்து அரசியல் தீர்வைப் பெறலாம் எனக் கூறும் கூட்டமைப்பின் தலைமையையா?

தமிழ் மக்கள் மட்டுமல்ல, அரசியல் அவதானிகளும் இந்த விடையத்தில் குழம்பித் தான் போயிருந்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் வடக்கு முதல்வரின் பின்னாள் நிற்பதை பலமுறை உணர்ந்த அரசாங்கம் நேரடியாக களத்தில் இறங்கியது. ஜனாதிபதியே வடக்கிற்குள் புகுந்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாட்களில் இருந்து இன்று வரை எடுத்து நோக்கினால் அவர் பெரும்பாலான சந்தரப்பங்களில் வட மாகாணத்திற்கான விஜயமே அதிகமாக இருக்கும்.

மைத்திரிபால சிறிசேன மென்மையானவர், எளிமையானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரின் நகர்வுகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையத்தில் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமந்தப்பட்ட இராணுவவீரர்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் விடையத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

இன்னொன்றையும் இவ்விடத்தில் தெளிவாக கூறலாம். மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவார். அவர் தமிழ் மக்களிடம் நல்ல பெயரைக் பெற்றுக்கொண்டு இன்னொரு புறத்தில் சிங்கள மக்களின் நன்மைக்காக பாடுபடுவார்.

இதுவரை காலமும் நிகழ்ந்தவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ வாருங்கள் என்று இன்னும் சிறிது காலத்தில் அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வடக்கு மக்களின் மனங்களை வென்றால் வடக்கு முதல்வரின் விடாப்பிடியான அரசியல் வீணாகும். மென்மைப் போக்கைக் கொண்டவர்களின் அரசியல் சித்தாந்தம் வெற்றி பெறும், அமெரிக்க இந்திய அரசுகளின் கூட்டு முயற்சி இலக்கை அடையும், இராணுவமும், மகிந்தரும் கோத்தாவும் நிம்மதிப் பெருமூச்சு விடுவர்.

இதுவரை காலமும் தமிழ் இளைஞர், யுவதிகள் சிந்திய குருதி மண்ணுக்குள் காய்ந்து காலம் மறந்து போகும்.

வடக்கு மீது மையம் கொள்ளும் மைத்திரிபால சிறிசேன கூறும் கருத்துக்கள் உண்மையில் வரவேற்கப்படத் தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர் அவற்றை எல்லாம் எந்த நோக்கத்திற்காக செய்கின்றார் என்பதில் தான் தங்கியுள்ளது தமிழர்களின் தீர்மானம்.

ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி ஏற்ற ஓராண்டு காலப்பகுதியில் அவர் தமிழ்த் தலைமைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றினார் என யோசித்தால் விடை கிடைக்கும்.

இனி மைத்திரி வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனை வெல்வாரா? வடக்கில் அவரின் மையம் வெற்றி பெறுமா என்பது தமிழ் மக்களின் கைகளில் தான் உள்ளது. இதுவரை காலமும் சோராம் போகாமல் இருந்த தமிழ் மக்கள் இந்த வெற்று வார்த்தைகள் மீது மயக்கம் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நம்புவோம். மயங்கினால் தமிழர்களின் இருப்பு அந்தோ நிலை தான்.

-எஸ்.பி. தாஸ்

-http://www.tamilwin.com

TAGS: