அழுத்தங்களுக்கு வளையுமா அரசாங்கம்?

Amy_Searight_colomboஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏன் இலங்கைக்கு வருகின்றனர் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சூழலில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவரும் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலரான கலாநிதி அமி சீரைட் என்ற அதிகாரியே கொழும்பு வந்திருந்தார்.

இவரது பயணம் குறித்து முன்கூட்டியே அமெரிக்காவோ, இலங்கையோ அறிவித்திருக்கவில்லை. இவரது சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியான பின்னர் தான் இப்படியொரு அமெரிக்க உயரதிகாரி கொழும்பு வந்திருக்கிறார் என்ற விடயமே ஊடகங்களுக்குத் தெரியவந்திருந்தது.

கடந்த 18ம் திகதி கொழும்பு வந்த கலாநிதி அமி சீரைட் தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் தான் கடந்த திங்கட்கிழமை அதுபற்றிய ஊடக அறிக்கை ஒன்றை அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருந்தது.

அந்தக் கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் குடும்பத்துடன் கொழும்பு வந்திருந்தார்.

தனிப்பட்ட பயணமாகவே முன்னறிவிப்பின்றி வந்த அவர் ஒபாமாவின் செய்தியை காவி வந்துள்ளதாகவும், அரசாங்கத் தரப்புடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன

அதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலர் அமி சீரைட்டின் பயணம் ஊடகங்களில் அவ்வளவாக முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

எனினும் இவரது இந்தப் பயணத்தின் நோக்கம் இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது. இலங்கை இராணுவத்தின் எதிர்காலப் பங்கு தொடர்பாகப் பேச்சு நடத்துவதே, அமி சீரைட்டின் இலங்கைப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கை இராணுவத்தை மறுசீரமைப்பது என்ற விவகாரம் இப்போது சூடு பிடித்திருக்கின்றது என்பது பலருக்குத் தெரியும்.

இது ரணில் விக்ரமசிங்கவோ, மைத்திரிபால சிறிசேனவோ எடுத்த முடிவும் இல்லை. அதேபோல பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட திட்டமுமல்ல.

இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல். அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலகினால் ஐநாவின் பங்களிப்புடன் முன்வைக்கப்பட்டுள்ள திட்டமே இது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஐநா அமைதிப்படைக்கு கூடுதல் படையினரை அனுப்பி வைக்க மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்த விடயம்.

அமெரிக்கா சென்றிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளிடமும், ஐநா பொதுச் செயலரிடமும் கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உள்ளிட்ட இராஜதந்திரிகளிடமும் அரசாங்கத்தின் தரப்பில் தொடர்ச்சியாக இது வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஐநா அமைதிப்படைக்கு ஐயாயிரம் இலங்கைப் படையினரை அனுப்பும் அரசாங்கத்தின் ஆர்வத்தை, ஐநா பொதுச்செயலரும் அமெரிக்காவும் வரவேற்றிருந்தாலும் உடனடியாக அத்தகைய வாய்ப்பை வழங்க இந்த இரண்டு தரப்புகளும் தயாராக இல்லை.

இதற்குப் பிரதான காரணம் இலங்கைப் படையினர் மீதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தான்.

ஐநா அமைதிப் படையில் பணியாற்ற இலங்கை இராணுவத்தினர் கடந்த பல ஆண்டுகளாகவே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இராணுவ, கடற்படை, விமானப்படை அணிகள் அமைதிப்படைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதற்கென குகுலே கங்கவில் ஒரு பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

அங்கு பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் தான் ஐநா அமைதிப்படைக்கு ஆளணியினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

என்றாலும் இதுவரையில் ஐநா அமைதிப்படைக்கு அனுப்பி வைக்கப்படும் படையினர் மனித உரிமை மீறல்களில் தொடர்பு பட்டுள்ளனரா என்ற ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

போரில் பங்கெடுத்த படைப் பிரிவுகள் படையினர் எந்த தங்குதடையுமின்றி ஐநா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலும் மனித உரிமை மீறல்களில் தொடர்புடைய படையினரை சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சிகளிலும் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளிலும் பங்குபற்றுவதை தடுக்க வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில் தான் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைக்கின்ற முயற்சிகளை மேற்குலகம் ஆரம்பித்திருக்கின்றது.

பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐநாவும் கூடுதல் அக்கறை காண்பிக்கின்றன.

கொமன்வெல்த் மாநாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்குச் சென்றிருந்த போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

அப்போது பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புத் திட்டத்தைக் கண்காணிக்க புதுடில்லியிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகரையும் நியமித்திருந்தார்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரியான கப்டன் ஸ்ருவர்ட போர்லன்ட், சிறீவென்ஹாம் பாதுகாப்பு அக்கடமியைச் சேர்ந்த லெப். கேணல் ஜம்மி ஹாட்லியுடன் அண்மையில் கொழும்பு வந்த பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

அதன் பின்னரே அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலர் அமி சீரைட் கொழும்பு வந்தார்.

இவரும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கான திட்டங்கள் குறித்தே முக்கியமாக ஆராய்ந்தார். அத்துடன் ஐநா அமைதிப்படையில் இலங்கைப் படையினரின் எதிர்காலப் பங்களிப்புக் குறித்தும் அவர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அதாவது போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுமந்திருக்கும், இலங்கை இராணுவத்துக்கு வெள்ளை அடிப்பதே மேற்குலகின் இப்போதைய நோக்கம்.

இதனை இரணள்டு காரணங்களுக்காக மேற்குலகம் செய்ய முனைகிறது.

ஒன்று இந்த விடயத்தைக் கருவியாகப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றச் செய்ய முனைகிறது.

இரண்டு இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்போரைக் களையெடுக்க நினைக்கிறது.

இந்த இரண்டையும் செய்து விட்டால் இலங்கை இராணுவம் உலகின் மிகச் சிறந்த நிபுணத்துவமும், ஆற்றலும் கொண்ட இராணுவமாக மாற்றப்பட்டு விடும்.

இதற்கான முயற்சிகள் தான் மேற்குலகினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நிகழ்வுகள், பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், தன்னிச்சையாக கூடுதல் படையினரை ஐநா அமைதிப்படையில் சேர்ப்பதை அதிகரிக்க முடியாது.

இதனால்தான் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை களையெடுக்க முயற்சிக்கப்படுகிறது.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு நிபந்தனையாகவும் இந்த விடயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் போலவே பாதுகாப்புத் திணைக்களமும் நம்பகமான பொறுப்புக்கூறல் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைத்தல் உள்ளிட்ட விடயங்கள் அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் முட்டுப்பட்டுக் கொண்டிருந்தாலும் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கைப் படைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகளை தொடர்ந்து பேணியே வந்திருக்கிறது.

இப்போது இராஜாங்கத் திணைக்களமும் பாதுகாப்புத் திணைக்களமும் ஒரே தொனியில் நம்பகமான விசாரணைப் பொறிமுறை மற்றும் காணிகளை மீளளித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முனைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே கொழும்பு வந்திருந்த ஐநாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் எதிர்கால இராணுவ உறவுகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு முன்னர், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போது அமி சீரைட்டும் அதனையே குறிப்பிட்டிருக்கிறார். ஐநா அமைதிப்படைக்கு கூடுதல் ஆளணியை அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் மேற்குலகின் இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கியே ஆக வேண்டியிருக்கும்.

அடுத்தடுத்து கொழும்பு வந்த அமெரிக்க அதிகாரிகள், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை இணங்க வைக்கவும், பாதுகாப்புத் தரப்பை வழிக்குக் கொண்டு வருவதற்கும் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கமும் படைத்தரப்பும் இந்த விடயங்களில் எந்தளவுக்கு வளைந்து கொடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே, அடுத்தடுத்த கட்டங்கள் தீர்மானிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

-ஹரிகரன்

http://www.tamilwin.com/

TAGS: