கிராமம் – கிராமமாகச் சென்று கலந்துரையாடல்கள் – கருத்தரங்குகள்- குருபூசைகள் செய்யப்பட வேண்டும்

srhinduகிராமமாகச் சென்று இந்துசமயத்தின் வளர்ச்சிக்காக கலந்துரையாடல்கள் – கருத்தரங்குகள் – குரு பூசைகள் – விழாக்கள் போன்ற சமய நிகழ்வுகளை நடாத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நேற்று (29) வேதாகமமாமணி எஸ்.இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவித்தார்.

திருக்கோணமலை மாவட்ட இந்துசமய அபிவிருத்திச் சபையின் முதலாவது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்குச் கல்யாண மண்டபத்தில் சபையின் தலைவர் வேதாகமமாமணி, சோ. இரவிச்சந்திரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய தலைவர் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த வருடம் எமது சபையால் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிற்கு சேவைகளைச் செய்ய முடியாவிட்டாலும், வருகின்ற வருடங்களில் திருக்கோணமலை மாவட்ட இந்துசமய அபிவிருத்திச் சபை பல சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டி உள்ளது.

இதற்கு உறுப்பினர்களாகிய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் தேவைப்படுகின்றது சபையின் சேவையை கிராமம் – கிராமமாகச் சென்று இந்துசமயத்தின் வளர்ச்சிக்காக கலந்துரையாடல்கள் – கருந்தரங்குகள் – குரு பூசைகள் – விழாக்கள் போன்ற சமய நிகழ்வுகளை நடாத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இதற்கு கிராம ரீதியான பிரதிநிதிகளின் பங்களிப்பையும் தொடர்பையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து, கடந்த வருடம் நடைபெற்ற சபையின் இரண்டு பொதுக் கூட்டங்களின் அறிக்கைகள், பொதுச்சபையில் வாசிக்கப்பட்டு அவை சரியென முன்மொழியப்பட்டு – வழிமொழியப்பட்டு சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொருளாளர் அறிக்கை 19.10.2014 முதல் 31.12.2014 வரையும், 01.01.2015 முதல் 30.06.2015 வரையும், 01.07.2015 முதல் 27.12.2015 வரையுமான காலப்பகுதிகளாக வரையறுக்கப்பட்டு வாசிக்கப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சபையின் செயலாளர் எமது சபையின் குறிக்கோள்களில் ஒன்றான திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் – சமய நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் ஒவ்வொரு அறநெறிப் பாடசாலையை உருவாக்க உறுதுணையாக இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றது என்றும், இந்த நோக்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்கள் பெரும் தடையாகவும் பாரிய இடையூறகாவும் இருந்து வருகின்றது என்று கூறி எதிர்காலத்தில் இந்து சமயம் – பௌத்த சமயம் – இஸ்லாம் சமயம் – கிறிஸ்தவ சமயம் ஆகிய அனைத்து மதத்தவர்களுடைய மாணவ – மாணவிகளுக்கும் அறநெறிக் கல்வியை போதிப்பதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்களை முற்றாக தடைசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

செயலாளர் ந.சிறிஸ்கந்தராசா, சபை மாவட்ட ரீதியில் இயக்குவதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் உறுப்பினர்களை உள்வாங்கி சபையின் பணியை விரிவுபடுத்த வேண்டியிருப்பதனால் சபையின் அமைப்புவிதி 15ன் ‘ஆ’ வில் 15 ஆக உள்ள செயலவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று சபையைக் கேட்டுக் கொண்டு இதனை பிரேரணையாகவும் முன்மொழிந்தார். இதனை சபையும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த வருடத்திற்கான செயலவைத் தெரிவும் நடைபெற்றது. இதில் வேதாகமமாமணி சோ.இரவிச்சந்திரக் குருக்கள் தலைவராகவும், .நல்லையா சிறிஸ்கந்தராசா செயலாளராகவும், .சி.சண்முகசுந்தரம் பொருளாளராகவும், செ.சிவபாதசுந்தரம், உப – தலைவராகவும் .கு.சிவமூர்த்தி உப – செயலாளராகவும்,.ச.சர்வேஸ்வரன் உள்ளகக் கணக்காய்வாளராகவும், திருமதி.அ.வேலாயுமதம், திருமதி.ப.குணராஜசிங்கம், ந.சத்தியமூர்த்தி, க.கனகராசா, பொ.சற்சிவானந்தம், .ந.செல்வஜோதி, திரு.சோ.மயூரன், திரு.சி.பஞ்சலிங்கம், த.கௌரிராசா, அ.கணபதிமுத்து. ச.கலியுகவரதன், க.சிவநேசராசா, பா.கோணேஸ், திருமதி.ச.சிவஞானம், ம.உமாசங்கர் ஆகிய 15 பேர் கொண்ட செயலவை உறுப்பினர்களும் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
என செயலாளர் நல்லையா சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: