இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் இந்தியா தொடர்பில் இலங்கை அரசாங்கமானது எச்சரிக்கை கலந்த உணர்வோடு நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
த டிப்ளோமட் எனப்படும் சர்வதேச ராஜதந்திர உறவுகள் குறித்த சஞ்சிகையில் இது தொடர்பான கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகள் மூன்று தசாப்த கால போருக்குப்பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கை இதுவரை எதிர்கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் முற்றாக நீங்கியுள்ளது.
எனினும் முன்னைய வருடங்களை விட இலங்கை இம்முறை பாதுகாப்புக்காக கூடுதல் தொகையை ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பாதுகாப்புக்கென 307 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வான்பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மிக் தாக்குதல் விமானங்களையும் கொள்வனவு செய்யவுள்ளது.
இதற்கான காரணம் இலங்கையில் உள்நாட்டில் இருந்து இனி எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் வராதபோதிலும், வெளியிலிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற அச்சம் பாதுகாப்புத் தரப்பின் பிரதானிகள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் உள்ளது.
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் மற்றும் இந்தியா போன்ற தரப்புகளில் இருந்து எதிர்காலத்தில் தாக்குதல்களை எதிர் கொள்ள நேரிடலாம் என்றும் இலங்கை எதிர்பார்த்துள்ளது.
இதன்காரணமாகவே யுத்தம் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com