இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதி பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர மேயருமான நிசாம் காரியப்பர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்துகொள்ளும் விதத்தில் பொதுவான நிலைப்பாட்டை எடுப்பது பற்றி இருதரப்பிலும் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரசியல் தீர்வில் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் பொதுவான அணுகுமுறையை கடைப்பிடிப்பது தொடர்பில் நடக்கவுள்ள பேச்சுக்களின் முதல் கூட்டமாகவே இன்றைய சந்திப்பு அமைந்திருந்ததாகவும் ததேகூ பேச்சாளர் கூறினார்.
இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் மூலம் தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதாக வெளியாகியுள்ள விமர்சனங்கள் தொடர்பிலும் இருதரப்பிலும் பேசப்பட்டதாகவும் சுமந்திரன் கூறினார்.
கல்முனை விவகாரத்தில் உள்ளூர் தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இணங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். -BBC