தீர்வு பெறும் விடையத்தில் சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்: சிறீதரன்

sam_sri_001தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையினுடைய புத்தாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அறிவகம் பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் இயக்கமாக தமிழ் மக்களின் நெடுங்கனவினை சுமந்த தலைமைத்துவ சக்தியாக இன்று திகழ்கின்றது. இன்று நாங்கள் தமிழ் மக்களின் தலைவிதியை அதன் தீர்மானங்களை எதிர்கொள்ளப்போகின்ற சவால் நிறைந்த களம் ஒன்றில் சந்தித்து இருக்கின்றோம்.

இத்தகைய பலத்தையும் வளத்தையும் பெறுவதற்கு பின்னால் எத்தனையோ உயிர்களுடைய இரத்தமும் கண்ணீரும் இருக்கிறது. இந்த காலப்பணியை சிதைந்து போகாமல் காத்து மக்களுடைய நம்பிக்கையை நாங்கள் வென்றெடுக்க வேண்டும். இம் மக்களுக்கு துரோகம் செய்து விட முடியாது.

சம்மந்தன் ஐயா அவர்கள் தீர்வை அடைகின்ற விடயத்தில் மிகத் தெளிவான பார்வை உடையவராக இருக்கிறார். 2016 ல் அரசியல் அமைப்பு மாற்றங்களின் ஊடாக ஒரு தீர்வு நோக்கி பயணிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இவ்வேளையிலே சிங்கள தேசத்தின் அதிதீவிரவாதிகள் தமது எதிர்ப்புக்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் அதையும் தாண்டி சிங்கள மக்களிடம் நாங்கள் யதார்த்தங்களைக் கொண்டுசெல்ல வேண்டும். அவர்கள் எங்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்கின்ற சூழல் உருவாகவேண்டும். புலம்பெயர் சமூகம் இத்தீர்வை அடைவதிலே கணிசமான பங்கை வகிக்கும்.

தமிழ் நாட்டு மக்களுக்கும் எங்களுடைய தீர்வு தொடர்பில் கரிசனை உண்டு. மலையக தமிழ் சமூகம் முஸ்லிம் சகோதர்கள் மற்றும் நாங்கள் என அனைவரும் பொதுப் புரிந்துணர்வோடு ஒன்றுபட்டு சமத்துவ முறையிலான அரசியல் இலட்சியத்தை வெற்றி கொள்ளவேண்டும். இதனை அடைவது சுலபமான காரியம் அல்ல.

இங்கேதான் எங்களுடைய ஒற்றுமை எங்கள் பலத்தை தீர்மானிக்கும். நாங்கள் விரும்பும் தீர்வை ஏனையவர்களின் ஆசியுடன் ஏற்கச் செய்யும் அந்தப் பாதையை வலிமைப்படுத்தும் வருடமாக இவ்வருடம் விளங்கும்.

இதற்காக நாம் அனைவரும் எந்த வேறுபாடுகளுக்கும் இடம் கொடாது ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய கட்சிக் கட்டமைப்பு விடயங்கள், ஒழுக்கக் கோவைகளை நடைமுறைப்படுத்துதல், கட்சியிலும் அரசியல் செயற்பாட்டிலும் பெண்களின் பங்களிப்பினை அதிகரித்தல் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, கடந்த காலத்தில் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அபிப்பிராயங்களும் பெறப்பட்டன.

இந் நிகழ்வில் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் குருகுலராஜா வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அரியரட்ணம், பசுபதிப்பிள்ளை கட்சிசெயலாளர் சிவபாலன் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட, பிரதேச கிளைகளின் நிர்வாகிகள் அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: