சவுதி அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட ஷியா தலைவரின் பரிசுத்த ரத்தம் பழிவாங்கியே தீரும்: அயாத்துல்லா கமேனி ஆவேசம்

komeniடெஹ்ரான், ஜன.3-

சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர்(56) என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றிப்பட்டது.

சவுதி அரேபியாவில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் சல்மானின் ஆட்சி நடைபெற்று வருவதால் ஷியா பிரிவு மக்கள் அங்கு இரண்டாம்தர குடிமக்களைப் போல் நடத்தப்படுவதற்கு ஷியா ஆதரவாளர்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஈரான் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றது.

ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் ஈரான் அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு கடும் விலை கொடுக்க வேண்டி வரும் எனவும் ஈரான் கூறியிருந்தது. அதற்கேற்ப, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின்மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், நிம்ர் அல் நிம்ருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் ஈரானில் வாழும் ஷியா பிரிவு மக்களின்
மிகப்பெரிய மதிப்புமிக்க தலைவராக மதிக்கப்படும் அயாத்துல்லா அல் கமேனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்த மரணத்துக்கு காரணமான சவுதி அரேபியா உரிய தண்டனையை அனுபவித்தே தீரும். நியாமற்ற – நீதியற்ற முறையில் சிந்தப்பட்ட நிம்ர் அல் நிம்ரின் பரிசுத்த ரத்தம் சவுதி அரசியல்வாதிகளை பழிவாங்கியே தீரும். அவர்கள் வீழ்வது உறுதி என அவர் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

-http://www.maalaimalar.com