மதகுருவுக்கு மரண தண்டனை: சவுதி அரேபியா-ஈரான் மோதல் முற்றியது! ராஜாங்க உறவுகள் துண்டிப்பு

shiah-muslimsரியாத்: ஷியா பிரிவு மதகுருவுக்கு உள்ளிட்ட 47 பேருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை அளித்தது தொடர்பான சர்ச்சையால் ஈரானுடன் அந்த நாட்டுக்கு மோதல் போக்கு உருவாகியுள்ளது.

இதை தொடர்ந்து, ஈரானுடனான அரசு ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியாவும், பஹ்ரைன் நாடும் அறிவித்துள்ளன. அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, சவுதிக்கு எதிராக தாக்குதல் நடத்திய, ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு உள்பட 47 பேரை 2 தினங்கள் முன்பு வாளால் வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியது சௌதி அரசு.

இதற்கு ஈரான் அதிபர் ஹாசன் ரௌஹாணி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது ஈரான் நாட்டினர் தாக்குதல் நடத்தினர்.

தங்கள் தூதரகம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுதி அரசு, ஈரானுடனான அரசு ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவுதி நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜூபேர் தங்கள் நாட்டில் உள்ள ஈரான் அதிகாரிகள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இப்பிரச்னையில்,சவுதி அரேபியா அரசுடன் கைகோர்த்து ஈரானுடனான அரசு ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக சூடான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், சவுதி மற்றும் ஈரான் நாடுகளிடையே முற்றிவரும் பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தராக செயல்பட தயார் என்று ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் போக்கால், எமிரேட்ஸ் பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com