இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இரு நாடுகளிடமும் தீர்வு இல்லை: சந்திரசேகர்

chandra_sekaran_001வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகள் அத்துமீறலை தடுக்க இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் தீர்வு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர் அத்துமீறல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் என சகல தரப்பிடமும் முறையிட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மாறாக இந்தியாவுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசுவதற்கே அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பினர் பயப்படுகின்றனர்.

இந்திய துணைத் தூதரகம் இங்குள்ளவர்களை விலைக்கு வாங்க நினைக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து மீனவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு கட்டமைப்பு உருவாக்க வேண்டும் அதன் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மட்டும் எமது வளங்கள் அழிய காரணமில்லை: ஏ.சூசை ஆனந்தன்

வடமாகாண மீன்பிடி பொருளாதாரம் வளர்ச்சி அடையாமைக்கு இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை மட்டும் காரணம் காட்ட முடியாது. எமது மீனவர்களும் தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்கின்றர். அவையும் முக்கிய காரணியாகும் என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளரும், மீன்பிடித்துறை நிபுணருமான ஏ.சூசை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து   தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்திய இழுவை படகுகள் எல்லை தாண்டுதல், எமது கடல்வளத்தை சூறையாடுதல், தடைசெய்யப்பட்ட தொழிலை செய்தல் ஆகிய செயற்பாடுகளை செய்கின்றனர். இதனால் பாரியளவு கஷ்டங்களை எமது மக்கள் எதிர்கொள்வது உன்மையே.

ஆனால் எமது மாகாணத்தின் மீன்பிடிசார் பொருளாதாரம் வளர்ச்சி அடையாமைக்கு இது மட்டும் காரணமாகாது. எமது மீனவர்களும் தடைசெய்யப்பட்ட தொழில்களை செய்கின்றனர். குறிப்பாக இழுவை படுகள், சுருக்கு வலை, கம்பிவலை, டைனமைற் ஆகியவற்றை பயன் படுத்தும் போதும் கடல்வளம் பாதிக்கப்படுகின்றது.

மேலும் எமது மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாக அறிவு மற்றும் வளங்கள் இல்லாமை, துறைமுக வசதிகள் இல்லாமை, மீன்வளம் உள்ள பகுதிகள் விடுவிக்கப்படாமை போன்றனவும் காரணங்களாகின்றன.

மேலும் இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்திய அரசாங்கம் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை மாறாக பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவக்க காட்டும் ஆர்வத்தை மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுப்பதில் காட்டுவதில்லை என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: